பெட்ரோல் ஊற்றி மளிகை கடையை எரித்த வாலிபர் கைது ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்


பெட்ரோல் ஊற்றி மளிகை கடையை எரித்த வாலிபர் கைது ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 5 Jan 2021 7:49 AM IST (Updated: 5 Jan 2021 7:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரியமங்கலத்தில் பெட்ரோலை ஊற்றி மளிகை கடையை எரித்தவாலிபர் கைது செய்யப்பட்டார்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரசூல் முகமது (வயது 45). இவர் மேல அம்பிகாபுரம் திடீா் நகர் அண்ணாநகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் அவரது மளிகைக் கடை திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதுகுறித்து கடைக்கு அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின்பேரில், ரசூல் முகமது அங்கு விரைந்து சென்றார். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனத்தில் விரைந்தனர்.

ஆனால், தெருவில் பாதாள சாக்கடைகளுக்காக குழிகள் தோண்டப்பட்ட காரணத்தினால் தீயணைப்பு வாகனத்தால் சம்பவ இ்டத்்திற்கு செல்ல முடியவில்லை. பின்னர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு இங்கிருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதி்ப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்ததாக கூறப்படுகிறது.

வாலிபர் கைது

இதுகுறித்த புகாரின்பேரில், அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மேல அம்பிகாபுரம் திடீர்நகர் கலைஞர் தெருவை சேர்ந்த குமரேசன் (23) மளிகைக் கடையை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது.

அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது மளிகை கடையில் சிகரெட் வாங்கியபோது, ரசூல்முகமதுவிடம் அவர் பிரச்சினை செய்ததும், பின்னர் அவரது வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததும், அதனைத்தொடர்ந்து நள்ளிரவு பெட்ரோல் ஊற்றி கடைக்கு தீ வைத்ததும் தெரிய வந்தது. அதன்பேரில், போலீசார் அவரை ைகது செய்தனர். இது சம்பந்தமாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story