வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
200 தொகுதிகளுக்கு அதிகமாக...
மு.க. அழகிரி மதுரையில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றித்தான் முழுக்க பேசி உள்ளார். இதற்கு மு.க.ஸ்டாலின்தான் பதில் கூற வேண்டும். தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்? என்பது குறித்து அ.தி.மு.க. தலைமை முடிவு செய்யும். லெட்டர்பேடு கட்சிகள் கூட நாங்கள் ஆதரவு கொடுத்தால்தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும் என்று கூறுவார்கள். இது அவர்களது உரிமை.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் எங்களது கூட்டணியில் தொடர்கின்றன. தேர்தலின்போது ஒவ்வொரு கட்சியும் தங்களது பலம் குறித்து தொண்டர்களுக்கு கூறுவதற்காக கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும்.
திரையரங்குகளில்100 சதவீத இருக்கைகள்
திரைப்படத்துறையினரின் பல்வேறு கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்திலும், திரைப்படத்துறையினரின் கோரிக்கைகளை ஏற்று, பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்காக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று திரைப்படத்துறையினர் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து திரைப்படம் பார்ப்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story