தஞ்சை மாவட்டத்தில் 1.16 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள்


தஞ்சை மாவட்டத்தில் 1.16 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள்
x
தினத்தந்தி 5 Jan 2021 9:06 AM IST (Updated: 5 Jan 2021 9:06 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 3-வது கட்டமாக 1.16 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை, பாடப்புத்தகங்களை முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிரு‌‌ஷ்ணன் வழங்கி தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

கொரோனா ஊரடங்கு காரணமாக இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் தொலைக்காட்சி மூலம் அரசு கல்வி அளித்து வருகிறது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கல்வி அளித்து வருகிறது. இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள் போன்றவற்றை அரசு வழங்கி உள்ளது.

அதன்படி ஏற்கனவே 2 கட்டமாக விலையில்லா பாடப்புத்தகங்கள் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3-வது கட்டமாக நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் 4-வது செட் சீருடை ஆகியவை வழங்கப்பட்டது.

முதன்மைக்கல்வி அதிகாரி

தஞ்சை மேம்பாலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிரு‌‌ஷ்ணன் வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி, உதவி தலைமை ஆசிரியர் சங்கரன், உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிரு‌‌ஷ்ணன் கூறியதாவது:-

புத்தகம் பெறுவதற்காக வரும் மாணவ, மாணவிகள் முககவசம் அணிந்து வர வேண்டும். விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

1 முதல் 7-ம் வகுப்பு வரை....

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 1,019 தொடக்கப்பள்ளிகள், 267 நடுநிலைப்பள்ளிகள், 147 உயர்நிலைப்பள்ளிகள், 142 மேல்நிலைப்பள்ளிகளில் இந்த பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 899 மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் 93 ஆயிரத்து 755 பேரும், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் 23 ஆயிரத்து 144 பேரும் அடங்குவர்.

சீருடைகள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 58 ஆயிரத்து 312 பேருக்கும், மாணவிகள் 60 ஆயிரத்து 123 பேருக்கும் வழங்கப்படுகிறது. வழக்கமாக அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். தற்போது பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும் அதே நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போல் மாணவர்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story