விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி கடலூர் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கு


விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி கடலூர் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கு
x
தினத்தந்தி 5 Jan 2021 6:28 AM GMT (Updated: 5 Jan 2021 6:28 AM GMT)

பச்சை துண்டு போட்டுக்கொண்டு தான் ஒரு விவசாயி என்று கூறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறார் என்று கடலூாில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

அரசு தடை

கிராம சபை கூட்டத்தை வருடத்திற்கு 4 முறை நடத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியிலும் தொடர்ந்து நடத்தி வந்தோம். ஆனால் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் நடக்கவில்லை.

அதனால் தான் நாம் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டு, கடந்த 23-ந்தேதியில் இருந்து தொடர்ந்து நடத்தி வருகிறோம். அன்று மாலையே கிராம சபை கூட்டத்தை தி.மு.க. நடத்தக்கூடாது என்று எடப்பாடி அரசு தடை போட்டது. இதில் சச்சரவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று, நாம் சட்டரீதியாக நீதிமன்றத்திற்கு சென்றால் கூட வழக்கில் வெற்றி பெற முடியும்.

இருப்பினும் நீங்கள் கிராம சபை கூட்டத்தை தானே நடத்தக்கூடாது என்கிறீர்கள் என்று, நான் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்துகிறேன் என்று அறிவித்து, இப்போது தொடர்ந்து நடத்தி வருகிறோம். மக்கள் கூட்டத்தை பார்த்து ஆத்திரமடைந்து தான் அதற்கு தடை போட்டார்கள்.

பாதுகாப்பு

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்கள், கொள்ளை, ஊழல், லஞ்ச, லாவண்யங்களை எடுத்து சொல்லி வருகிறோம்.

எல்லா இடத்திலும் பெண்கள் தான் அதிக அளவில் வருகிறார்கள், ஆனால் ஆண்கள் உங்களை சுற்றி பாதுகாப்பாக இருக்கிறார்கள். அரசியல், பல தொழில்களில் ஜாம்பவன்களாக இருக்கக்காரணம், பெண்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.

சாதனைகள்

கலைஞர் தனது ஆட்சியில் பெண்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தினார். 5 முறை ஆட்சிக்காலத்தில் இருந்த போது, கருணாநிதி எவ்வளவோ சாதனைகளை செய்துள்ளார். அதில் குறிப்பாக பெண்களுக்கு, சொத்தில் சமஉரிமை தந்தவர் கருணாநிதி.

1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தில் முக்கிய தீர்மானம் தான், சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை.

அதைத்தான் 60 ஆண்டுகளுக்கு பிறகு 1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது, நிறைவேற்றி தந்தார். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடு, இந்த தீர்மானத்தை நிறைவேற்றி தந்தது தி.மு.க. ஆட்சியில் தான். பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.

மகளிர் சுயஉதவிக்குழு

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 1989-ம் ஆண்டு மகளிர் சுயஉதவிக்குழு திட்டத்தை கொண்டு வந்தார். பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். வங்கிக்கடன், மானியம், சுழல்நிதி, சிறு, சிறு தொழில் செய்ய இந்த மகளிர் சுயஉதவிக்குழு கொண்டு வரப்பட்டது. நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது, நீண்ட நேரம் நின்று கொண்டே அனைவருக்கும் சுழல் நிதியை வழங்கினேன்.

ஆனால் இப்போது உள்ள உள்ளாட்சித்துறை, ஊழல் துறை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, ஊழல் அமைச்சர். ஊழல் மணி.

எந்த துறையாக இருந்தாலும் சரி, ஒட்டு மொத்தமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் இந்த ஆட்சியை தூக்கி எறிவதற்கான நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது.

முதலீடு

2015-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். அப்போது ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்ப்பதாக கூறினார். தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அதில் கோடிக்கணக்கில் முதலீட்டையும் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கி விட்டதாக கூறினார்கள். ஆனால் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. முதலீட்டையும் பெரிய அளவில் கொண்டுவரவில்லை.

19-ம் இடம்

முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடு 19-ம் இடத்தில் உள்ளது. இதை மூடி மறைத்து விட்டு, அப்பட்டமான பொய்யை சொல்லி வருகிறார்கள். இந்த ஆட்சியில் படித்து விட்டு வேலைகிடைக்காமல் ஏராளமானோர் உள்ளனர். இதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

விவசாயத்தை பற்றி பார்த்தால், தூத்துக்குடியில் விவசாயி ஒருவர், கடனை கட்ட முடியாமல், விவசாயத்தை செய்ய முடியாமல் தூக்குப்போட்டு இறந்து விட்டார். அவர் சாவதற்கு முன்பு, விவசாய நிலத்தில் தன்னுடைய பேத்திக்கு கடிதம் எழுதி விட்டு இறந்து விட்டார். இந்த நிலை மற்ற இடங்களிலும் உள்ளது.

பச்சை துரோகம்

டெல்லியில் ஒரு மாதத்தை தாண்டி 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். மற்ற மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர்கள் அந்த சட்டங்களை எதிர்த்து வருகிறார்கள். எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த திட்டங்களை ஆதரித்து பேசுகிறார். பச்சை துண்டு போட்டுக்கொண்டால் விவசாயியா? பச்சை துண்டு போட்டுக் கொண்டு விவசாயிகளுக்கு பச்சைத்துரோகம் செய்கிறார். இந்த சூழலை தெரிந்து கொண்டு, உங்கள் கோரிக்கைகளை வைத்து உள்ளீர்கள். நீங்கள்(மு.க.ஸ்டாலின்) முதல்-அமைச்சராக வரப்போகிறீர்கள் என்று நீங்கள் மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் பேசி வருகிறார்கள்.

இன்னும் 4 மாதம் தான். என் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள் தானே, என்னை நம்புங்கள், நிச்சயம், உங்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரமேஷ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.கி.சரவணன், கணேசன், சபா. ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இள.புகழேந்தி, கோ. அய்யப்பன், வி.ஆர். அறக்கட்டளை நிறுவனரும், தி.மு.க. பிரமுகருமான விஜயசுந்தரம், நகர செயலாளர் ராஜா, முன்னாள் நகரசபை தலைவர் ஏ.ஜி. ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல். குணசேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜசேகரன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி.பெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், நில வள வங்கி தலைவர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துக்குமாரசாமி, ஞானப்பிரகாசம், சுரேஷ், மனோகர், இந்திரா விஜயன், கனகராஜ், பிரகாஷ், உமாராணி, லெட்சுமி பாண்டியன், சன்பிரைட் பிரகாஷ், வக்கீல் வினோத், நிலா ஓட்டல் தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மு.க.ஸ்டாலினுக்கு சிதம்பரம் அ டுத்த வல்லம்படுகையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story