குடியாத்தத்தில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி - களிமண்ணை பார்சல் செய்து அனுப்பியது அம்பலம்
குடியாத்தத்தில் போலி கால்சென்டர் நடத்தி மோசடி நடந்துள்ளது. களிமண்ணை பார்சல் செய்து அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொதுமக்களை தொடர்பு கொள்ளும் பெண்கள் நாங்கள் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும், 100 நபர்களின் செல்போன் எண்களை தேர்ந்தெடுத்து குலுக்கல் நடத்தியதில் தங்கள் பெயர் வந்துள்ளதாகவும், தங்களுக்கு செல்போன் மற்றும் பவர்பேங்க் குறைந்த விலையில் தருவதாக கூறுவார்கள்.
பணத்தை செலுத்திவிட்டு தபால் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என செல்போன் மூலம் பொதுமக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளனர். இதனை நம்பி பொதுமக்கள் பணத்தை செலுத்தி பொருட்களை பெற்ற போது அந்த பொருட்கள் தரமற்றதாகவும், களிமண்ணை வைத்தும் பார்சல் செய்து அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் உத்தரவின்பேரில், குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நேற்று மதியம் போலீசாருடன் குடியாத்தம் புதுப்பேட்டை கோட்டா சுப்பையா தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது அந்த வீட்டில் 15 இளம் பெண்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது பொதுமக்களின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு, குறைந்த விலையில் செல்போன் மற்றும் பவர்பேங்க் பரிசு விழுந்திருப்பதாக பேசி வந்ததாக கூறி உள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் அங்கு சோதனை நடத்தியபோது ஏராளமான செல்போன்கள், களிமண் பார்சல், செல்போன் எண்கள் கொண்ட புத்தகங்கள் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். போலி கால் சென்டர் நடத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர.
Related Tags :
Next Story