மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் வீழ்த்தப்பட வேண்டும் - நாமக்கல் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு


மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் வீழ்த்தப்பட வேண்டும் - நாமக்கல் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 5 Jan 2021 7:53 PM IST (Updated: 5 Jan 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் வீழ்த்தப்பட வேண்டும் என நாமக்கல் தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

நாமக்கல்,

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். நாமக்கல் பூங்கா சாலையில் அவர் திறந்த வேனில் நின்றவாறு பேசியபோது கூறியதாவது:-

தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. அதற்கான சமீக்ஞைகள் இங்கு தெரிகிறது. மக்கள் நீதிமய்யத்தில் மாலைகள், பொன்னாடை கிடையாது. காலில் விழும் பழக்கமும் இல்லை. நாம் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டினால் போதும்.

தமிழகத்தை சீரமைப்போம் என்று நான் முழக்கத்துடன் புறப்பட்டபோது நாங்களும் அதில் பங்கேற்கிறோம் என்றீர்கள். ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு தமிழனும் இதில் பங்கேற்க வேண்டும். அப்போது தான் தமிழகம் சீராகும். ஊழல், ஊழல் என்று யார் மீதும் பழிபோடாமல் வழிகாட்டும் அரசியலை உருவாக்குவோம். அதற்கான நேரம் வந்து விட்டது. ஆரம்பத்தில் எங்களது கொடிகளை பார்த்தால் முறித்து போட்டார்கள். தற்போது எங்கு பார்த்தாலும் நமது கொடி பறக்கிறது. இது நடக்கும் என நான் நம்பினேன். நடத்தி காட்டியது நீங்கள். நீங்கள் எனது கரத்தை வலுப்படுத்தினால் நாளை நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லக்காபாளையம் பஸ் நிறுத்தத்தில் மக்கள் மத்தியில் பேசியதாவது:-

நான் பிரசார வாகனத்தில் வரவில்லை. மக்களின் அன்பில் மிதந்து வருகிறேன். 5 வயது முதல் நீங்கள் என்மீது அன்பு காட்டி வருகிறீர்கள். உங்களுக்கு அன்பை திருப்பி செலுத்தும் நேரம் வந்துவிட்டது. இதுவரை எத்தனையோ பேருக்கு அன்பு செலுத்தி அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினீர்கள். ஆனால் உங்களுக்கு அவர்கள் அன்பை திருப்பி செலுத்தவில்லை. இனி என் வாழ்க்கை உங்களோடு தான்.

உங்களுக்கு (மக்களுக்கு) துரோகம் செய்தவர்கள் வீழ்த்தப்பட வேண்டும். நாங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு நிறைய திட்டங்களை வைத்துள்ளோம். தமிழகத்தில் எல்லாவற்றிலும் கமிஷன் என்ற நிலை உள்ளது. நாங்கள் கமிஷன் வைக்கவில்லை. விஷன் வைத்துள்ளோம். இந்தியாவின் தலைவாசல் தமிழகம் என்ற நிலையை ஏற்படுத்துவோம். அதற்கு நீங்கள் தயாராக இருங்கள். ஆட்சிப்பொறுப்பில் அமர அனுமதியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

திருச்செங்கோட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் மக்களிடையே அவர் பேசியதாவது:- புதிய மாற்றத்திற்கு தமிழகம் தயாராகிவிட்டது என்பதற்கு இத்தனை முகங்களும் உயரும் உங்கள் குரல்களும் சாட்சி. புதிய திட்டத்துடன் நேர்மையுடன் ஒரு கட்சி உங்களை அணுகுகிறது. அதை நீங்கள் ஏற்க வேண்டும். போற்றவேண்டும். நாளை நிச்சயம் நமது ஆகும். பல அரிய திட்டங்களுடன் மக்கள் நீதி மய்யம் மக்களை நோக்கி வந்து கொண்டுள்ளது. மக்கள் அதை அரவணைத்து ஏற்கவேண்டும். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன.. அப்போது தமிழகத்தை மாற்றுவதற்கான உத்தரவை நீங்கள் பிறப்பிக்க வேண்டும். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே. நிச்சயம் நமதே. இவ்வாறுஅவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர செயலாளர் ரிக் நடேசன், மல்லசமுத்திரம் நகர செயலாளர் சுப்பிரமணியன், மண்டல செயலாளர் செந்தில்குமார், வையப்பமலை ராமசாமி, மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராஜா, நற்பணி மன்ற செயலாளர் அன்பழகன், தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், இளைஞரணி செயலாளர் பிரபு, சிறுபான்மை அணி செயலாளர் ரபிக், மகளிர் அணி செயலாளர் கவிதா உள்ளிட்ட நிர்வாகிகள், ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார். ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பிரசார வேனில் இருந்து இறங்கி செல்ல முடியாததால் நிர்வாகிகளை அலுவலகத்தை திறக்க சொல்லி கைதட்டி திறந்து வைத்தார். திருச்செங்கோடு நகர செயலாளர் நடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

ராசிபுரம் கதர் கடை அருகில் வேனில் நின்றபடி கமல்ஹாசன் பேசியதாவது:-

ராசிபுரம் எனக்கு புதிதல்ல. 30 வருடங்களுக்கு முன்பு நற்பணி இயக்கம் தொடங்கியபோது இங்குள்ளவர்கள் சென்னைக்கு வந்து ரத்ததானம் செய்துள்ளனர். இது சரித்திரம். எங்களை பார்த்து மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள். நாங்கள் உங்களை பார்த்து கேட்டால் பதில் இருக்காது. ஆளும் ஆட்சியாளர்கள் உங்களை வறுமையில் இருக்கும்படி செய்கிறார்கள். வறுமையில் இருந்தால்தான் தேர்தலில் பணத்தை கொடுத்து ஓட்டை வாங்க முடியும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் வசதியாக இருந்தால் யோசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். வறுமைக்கோட்டை அழிப்பது மக்கள் நீதி மய்யம். நாங்கள் போடுவது புதுக்கோடு.

தற்போது ஒவ்வொருவர் மீதும் ரூ.60 ஆயிரம் கடன் இருக்கிறது. அரசு மக்கள் மீது கடனை சுமத்தியுள்ளது. என்னுடைய கடன் அதையும் தாண்டி உள்ளது. எனது வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணித்து உள்ளேன். தமிழகத்தை சீரமைக்க உங்கள் அனுமதி தேவை. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உங்கள் ஓட்டின் உரிமையை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும். இன்றும் 3 மாதங்களில் நீங்கள் போடும் ஓட்டை கடமையாக கருதி போட்டால் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ். ராசிபுரம் நகர செயலாளர் மணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story