சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தேவை இல்லை - கமல்ஹாசன் பேட்டி
சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் தேவை இல்லை என்று சேலத்தில் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சேலம்,
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக சேலத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனியில் உள்ள கொங்கு மண்டபத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் திட்டத்தை தடுக்க வலியுறுத்தி கமல்ஹாசனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
முன்னதாக கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் 4-வது கட்ட தேர்தல் பிரசாரத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். 2-வது கட்ட பிரசாரத்தின் போது லஞ்ச பட்டியலை வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. சுற்றுச்சூழல் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சி என்றால் அது மிகையாகாது. இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 7 முக்கிய வாக்குறுதிகளை கொடுக்கிறோம்.
இந்த வாக்குறுதிகளை விரைவில் நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் மனித சரித்திரம் மாறும். எங்களுக்கு இந்த திட்டம் ஒரு மிஷன். ஆனால் குடிமராமத்துப்பணி திட்டம் என்பது ஒரு கமிஷன் சம்பந்தப்பட்டது. இதனால் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அது இன்னொரு வியாபார யுக்தி ஆகும். லோக்பால் சட்டத்துக்கு பல் எல்லாம் பிடுங்கப்பட்டுள்ளது. அதற்கு மறுபடியும் பல் கட்ட வேண்டும்.
நேர்மை என்பது அடித்தளத்தில் இருந்து வர வேண்டும். லஞ்சம் என்பது மக்கள் கொடுக்காமல் இருந்தால் அது இல்லாமல் ஆகி விடும் என்று சில அமைச்சர்கள் கூறுகின்றனர். மக்கள் மீது பழிபோடுவது நேர்மையற்ற கோழைத்தனம் ஆகும். தலைமை சரியாக இருந்தால் படிப்படியாக அந்த நேர்மை வாழ்வு முறையாக மக்களை சென்றடையும். நான்கு கட்டமாக சுற்றி வருகிறோம். சேலம் உள்பட எந்த ஊரிலும் பாதாள சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்படவில்லை.
எல்லாமே திறந்தவெளி சாக்கடையாக தான் உள்ளது. எங்குபார்த்தாலும் குப்பை, பிளாஸ்டிக் கிடக்கிறது. இது தமிழகத்துக்கு வந்துவிட்ட ஒரு நோய் ஆகும். சதுப்பு நிலம் காக்கப்பட வேண்டும் என்று பலர் இன்னமும் போராடி தான் வருகின்றனர். சட்டங்கள் மூலம் தான் இதை தீர்க்க முடியும். தொழிற்சாலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்பட வில்லை. விவசாய நிலத்தை இழந்து நாம் ஒரு குப்பை மேடாக மாறிவிடக்கூடாது.
சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்தால் 1½ லட்சம் பனைமரம், 2 லட்சம் தென்னை மரங்கள் அழியப்போகிறது. 500-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழக்கின்றனர். விவசாயம் கெட்டுப்போக போகிறது. சேலத்துக்கு சீக்கிரம் செல்லலாம் என்ற ஒரு சவுகரியத்துக்காக இந்த சாலை போடப்படுவதாக கூறுகின்றனர். அதிவேகமான பயணம் எதற்காக என்றால் பிளாஸ்டிக், இரும்பு போன்ற சரக்குகளை கொண்டு செல்ல தான்.
மலைகள், கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும். எல்லாவற்றையும் விற்றுவிட்டால் சாப்பாட்டுக்கு ஒன்றும் இருக்காது. எனவே 8 வழிச்சாலை திட்டம் தேவை இல்லை. வழி வேண்டும், சாலைகள் வேண்டும் என்பதற்காக மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து அதை செய்ய கூடாது. இதற்கு முன்பும் இதற்காக குரல் கொடுத்துள்ளேன். அப்போது யாரும் கேட்கவில்லை. தற்போது தலைவனாக இருந்து குரல் கொடுத்து வருகிறேன்.
தொழிற்சாலைகள் வேண்டும். ஆனால் மக்கள் உயிர்பலிக்கு நடுவில் செய்ய கூடாது. ஒழுங்காக சட்ட திட்டங்களை எல்லாம் பின்பற்றியிருந்தால் தூத்துக்குடியில் 13 பேர் இறந்திருக்க அவசியமில்லை. நல்ல திட்டங்கள் பல உள்ளன. அவற்றை செயல்படுத்த உள்ளோம்.
ஆட்சியை கைப்பற்றினால் தான் இந்த திட்டங்களை கொண்டு வரமுடியும். பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 கொடுப்பது அரசுக்கு செலவு, மக்களுக்கு லாபம், இதனால் எந்த ஒரு மாற்றமும் நிகழாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story