உணவு சமைக்க தாமதம்: கணவர் ஓட்டலுக்கு சாப்பிட சென்றதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
இளையான்குடியில் உணவு சமைக்க தாமதம் ஆனதால் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு கணவர் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். இதில் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளையான்குடி,
இளையான்குடி நகர் பகுதியில் உள்ள மல்லிபட்டினத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). இவர் கட்டிட வேலையில் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (29).
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற கண்ணன் மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்து உள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி முத்துலட்சுமி, மதிய உணவு தயாரித்து கொண்டு இருந்தார். கொஞ்ச நேரம் பொறுங்கள். உணவு ரெடியாகி விடும் என முத்துலட்சுமி கூறி இருக்கிறார்.
வேலைக்கு போக வேண்டும் அவசரத்தில், ஏன் சீக்கிரம் சமையல் செய்ய மாட்டாயா? என கண்ணன், தனது மனைவியை திட்டி உள்ளார். பின்னர் அங்கிருந்து நான் ஓட்டலில் சாப்பிட்டு கொள்கிறேன் என்று கூறி விட்டு சென்று விட்டார்.
கணவர் தன்னை திட்டி விட்டு சென்றதால் விரக்தி அடைந்த முத்துலட்சுமி வீட்டில் தன்னுடைய சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்துலட்சுமியின் தந்தை சேகர் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story