இறந்த ஆட்டுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கிராம மக்கள் - கொட்டகையை அதிகாரிகள் அகற்றியதாக புகார்
இறந்த ஆட்டுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு கிராம மக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொட்டகையை அதிகாரிகள் அகற்றியதால் குளிரில் ஆடுகள் செத்து போனதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த மாங்குடி தெற்குவாடி கிராமத்தை சேர்ந்த முத்தரசன் தலைமையில் கிராம மக்கள் நேற்று இறந்த ஆட்டுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் லதாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நாங்கள் 19 பேர் சிவகங்கை தாலுகா மாங்குடி தெற்குவாடி கிராமத்தில் வசித்து வருகிறோம். பாரம்பரியமாக செம்மறியாடுகள் வளர்த்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஒரு நபருக்கு 150 ஆடுகள் வீதம் சுமார் 4 ஆயிரம் ஆடுகள் வரையுள்ளது.
எங்கள் ஆடுகளை ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை மாவட்டத்திற்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று விடுவோம். அங்கு விளைநிலங்களில் ஆட்டு கிடை போட்டு தொழில் செய்து வந்தோம். விவசாய காலத்தில் மட்டும் ஆடுகளுடன் சொந்த ஊருக்கு திரும்பி விடுவோம். ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டும் ஊரில் அடைத்து வைக்க இடம் இல்லாததால் குடஞ்சாடி பகுதியில் உள்ள மேட்டுப்பகுதியில் கொட்டகை அமைத்து தனித்தனியாக ஆடுகளை அடைப்போம். இந்த கொட்டகைகளை கடந்த 2-ந்தேதி அதிகாரிகள் பிரித்து சென்றதால் பல ஆடுகள் குளிரில் செத்து விட்டன. எனவே எங்களுக்கு கொட்டகை அமைக்க அனுமதி தர வேண்டும். இல்லையென்றால் வேறு இடத்தில் ஆடுகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்று கொண்ட வருவாய் அதிகாரி இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, கிராம மக்கள் ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் பகுதி நீர்நிலைகளை ஒட்டிய பகுதி. அதனால் அங்கு கொட்டகை அமைக்க தடை விதித்து உள்ளோம் என்றார்.
இது போல் அழகுநாச்சிபுரத்தை சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை தாலுகா ஒக்கூர் பகுதியை சேர்ந்த அழகுநாச்சிபுரத்தில் சுடுகாடு கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளது. இது தவிர அழகுநாச்சிபுரத்தில் வரத்து கால்வாயும் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story