கிராமங்களில் இ-சேவை மையங்கள் செயல்படாததால் மக்கள் வரிப்பணம் வீண் - பெரிய கருப்பன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
கிராமங்களில் இ-சேவை மையங்கள் செயல்படாததால் மக்கள் வரிப்பணம் வீணாவதாக பெரிய கருப்பன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கூட்டத்தில் சிவகங்கை தி.மு.க. மாவட்ட செயலாளரும், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பெரியகருப்பன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது அ.தி.மு.க. அரசால் திறக்கப்பட்ட அம்மா மினிகிளினிக்கில் முறையாக டாக்டர்கள், நர்சு, உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர்களே இங்கு பணியாற்றுகிறார்கள். போதிய டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கிராமங்களில் இ-சேவை மையங்கள் தொடங்குவதற்காக பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவை இன்னும் முறையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் எந்த பயனும் இல்லாமல் வீணாகி வருகிறது. மக்களுக்கு பயன் இல்லாத அ.தி.மு.க.வை மக்கள் நிராகரிக்க தொடங்கி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தி.மு.க. அவை தலைவர் சேக், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிபுர், மற்றும் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story