மினி கிளினிக்கில் பணியாற்ற செவிலியர், மருத்துவ பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்வது ஏன்? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
“மினி கிளினிக்கில் பணியாற்ற செவிலியர், மருத்துவ பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்வது ஏன்?” என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. மதுரை வளர் நகரை சேர்ந்த வக்கீல் வைரம் சந்தோஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
தமிழ்நாட்டில் 2 ஆயிரம் மினி கிளினிக் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இங்கு பணிபுரியும் செவிலியருக்கு சம்பளமாக ரூ.14 ஆயிரமும், மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரம் மினி கிளினிக்குகளில் 585 மருத்துவ உதவியாளர்களும், 1,415 செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இதற்காக சுகாதாரத்துறை இயக்குனர் கடந்த மாதம் 15-ந்தேதி பணியாளர் நியமனம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன்படி தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவதால் இடஒதுக்கீடு, இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. கொரோனா நோய்தொற்று நேரங்களில் அனுபவம் இல்லாத செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவது சரியானதாக இருக்காது. எனவே மருத்துவ பணியாளர்கள், செவிலியர்களை ஏஜென்சி முறையில் தேர்வு செய்ய சுகாதாரத்துறை இயக்குனர் கடந்த 15-ந்தேதி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “தேசிய சுகாதாரத்துறை ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் 2.4 கோடி பொது மக்கள் பயன் அடைவார்கள். கொரோனா தொற்று மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 630 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து மினி கிளினிக்குகளும் செயல்படும்” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “தற்காலிக முறையில் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான காரணம் என்ன?” என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து நாளை (அதாவது இன்று) பதில் அளிப்பதாக அரசு வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story