கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை - மந்திரி சுதாகர் பேட்டி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jan 2021 5:39 AM IST (Updated: 6 Jan 2021 5:39 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி கர்நாடக அரசின் கவனத்திற்கும் வந்தது. கர்நாடகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் பரவாமல் இருக்கிறது. அதனால் மக்கள் யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. இனிவரும் நாட்களிலும் கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளேன். குறிப்பாக மாநில எல்லை பகுதிகளில் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த விஷயத்தில் சுகாதாரத்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது. மக்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பெங்களூருவில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனருடன் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளேன். மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், மாணவ, மாணவிகள் ஆதங்கப்பட வேண்டாம். பாதிப்புக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்த பின்பே பள்ளிகளுக்கு திரும்புவார்கள். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு தைரியமாக அனுப்பி வைக்க வேண்டும்.

தங்களது பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பெற்றோர் பின் வாங்க கூடாது. ஏனெனில் மாநிலம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே ஆசிரியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கொேரானா பரவல் மாநிலத்தில் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. ஆனாலும் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்த பின்பு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் வருகை தருகின்றனர்.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இங்கிலாந்தில் இருந்து வந்து பாதிப்புக்கு உள்ளான யாருக்கும், பெரிய அளவில் உடல் நலக்குறைவோ, பாதிப்போ ஏற்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆதங்கப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இங்கிலாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்தவர்களில் 75 பேர் இதுவரை தலைமறைவாக உள்ளனர். அவர்கள் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதால், அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருக்கிறது. தலைமறைவாக உள்ளவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ளவர்களை கண்டுபிடிக்க போலீசாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது. மாநில போலீஸ் டி.ஜி.பி.யுடன் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளேன்.

இங்கிலாந்தில் உருவாகி உள்ள புதிய விதமான கொரோனா வைரஸ், ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. அந்த வைரசால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், வேகமாக பரவும் தன்ைம கொண்டதாகும். அதனால் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொறுப்பற்ற முறையில் தலைமறைவாக இருப்பது சரியல்ல.

இங்கிலாந்தில் இருந்து வந்த மற்றொருவருக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தொியவந்துள்ளது. பெங்களூருவில் இதுவரை 7 பேர் புதிய கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மத்திய அரசு அனுமதி அளித்துள்ள 2 கொரோனா தடுப்பூசிகளும் முழுமையாக பரிசோதனை நடத்தப்பட்டு, எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்த பின்பே மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்று அவர் கூறினார்.


Next Story