பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் பணி தீவிரம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 Jan 2021 6:36 AM IST (Updated: 6 Jan 2021 6:36 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கருர்,

நாம் வசிக்கும் வீட்டினை நல்ல முறையில் பராமரித்து அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வதில் அனைவரும் அக்கறையோடு செயல்படுகிறோம். அந்தவகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி வீட்டிற்கு சுண்ணாம்புக்கல்லை தண்ணீரில் நீர்த்து வைத்து வெள்ளையடிப்பதை காலம் காலமாக கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் தற்போதைய நாகரிக வளர்ச்சிக்கேற்ப பெயிண்டு உள்ளிட்டவற்றால் வீட்டிற்கு வர்ணம் பூச தொடங்கி விட்டோம்.

இதனால் கரூர் பண்டுதகாரன்புதூர், க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனினும் சிலர் இந்த தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் நன்னியூர், வாங்கல், குப்புச்சிபாளையம், சியோம்பாளையம், புகளூர், மண்மங்கலம், ராமேஸ்வரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் வீட்டிற்கு வெள்ளையடிக்க பயன்படுத்தும் சுட்ட சுண்ணாம்புக்கல்லை தேடிப்பிடித்து வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் கரூர் அருகேயுள்ள பண்டுதகாரன்புதூரில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் பணியில் சண்முகம் உள்ளிட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு மூட்டை சுண்ணாம்புக்கல் ரூ.140 என்கிற வகையில் விற்பனை செய்யப்படுகிறது. சுண்ணாம்பு பவுடராகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

நோய் கிருமி

வீட்டிற்கு வெள்ளையடிப்பதை தவிர்த்து, கால்சியம்சத்து குறைவாக உள்ள கால்நடைகளுக்கு மருந்து தயாரிக்கவும், ஆட்டுமந்தையில், கோழிப்பண்ணையில் நோய் கிருமிகள் உள்ளிட்டவை தாக்காமல் தடுக்கவும், பட்டுப்பூச்சி வளர்ப்புக்கும் கூட விவசாயிகள் உள்ளிட்டோர் இந்த சுண்ணாம்புக்கல்லை வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர்.

இதுகுறித்து சண்முகம் உள்ளிட்ட தொழிலாளர்களிடம் கேட்டபோது, கோவை மாவட்டம் பொள்ளாச்சி, காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சுண்ணாம்புக்கல் கலந்த மண்ணை வாங்கி வருகிறோம். பின்னர் செம்மண்ணாலான சூளையில் அடுப்புக்கரி, தேங்காய் நார், மட்டைகள் உள்ளிட்டவற்றை போட்டு, அதன் மீது சுண்ணாம்புக்கல் மண்ணை கொட்டி வெப்பப்படுத்துவோம். இதில் மணல் தனியாக பிரிந்து கழிவாக வெளியேறி விடுகிறது. சுண்ணாம்பானது வெப்பத்தினால் வேக வைக்கப்பட்டு தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.

பூச்சிகள் அண்டுவதில்லை

இத்தகைய சுண்ணாம்புக்கல்லினை தண்ணீரில் நீர்த்து வீட்டிற்கு வெள்ளையடித்தால் பூச்சிகள் உள்ளிட்டவை அண்டுவதில்லை. வீட்டின் உள்புறத்தில் வெளிச்சம் நன்றாக கிடைக்கும். மேலும் வெயில், மழை காலங்களில் வீட்டின் மேற்பூச்சானது உதிர்ந்து விடாமல் சுண்ணாம்புக்கல் தடுக்கும். சுண்ணாம்புக்காரையால் கட்டப்பட்ட பழைய வீடுகள், அரண்மனைகள் உள்ளிட்டவை தற்போதும் கூட கம்பீரமாக காட்சியளிப்பதற்கு சுண்ணாம்பால் பயன்படுத்தியதே காரணம் ஆகும். இதனால் வெள்ளையடிக்கும் சுட்ட சுண்ணாம்புக்கல்லுக்கு தற்போதும் கூட மவுசு குறைவதில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் வியாபாரம் சறுக்கலை சந்தித்த போதிலும் கூட, குலத்தொழிலை விட மனமின்றி தொடர்ந்து செய்து வருகிறோம் என்று கூறினர்.

Next Story