மராட்டியத்தில் இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - இன்று தெரியும்
மராட்டிய மாநகராட்சி பகுதிகளில் இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து இன்று முடிவு தெரியும்.
மும்பை,
மராட்டியத்தில் மாநகராட்சி பகுதிகளில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் ஜனவரி 5-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு அறிவித்தது. இந்த உத்தரவின்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர முடியாது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பொது இடங்கள் மற்றும் ஓட்டல்கள், கேளிக்கை விடுதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க இரவு நேர ஊரடங்கை அரசு மேற்கொண்டு இருப்பதாக கூறப்பட்டது.
மேலும் இங்கிலாந்து நாட்டில் புதுவகை கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளதை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக மாநில அரசு தெரிவித்தது.
இந்த இரவு ஊரடங்கை போலீசார் தீவிரமாக அமல்படுத்தினர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கூடவில்லை.
இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) அதிகாலையுடன் இரவு ஊரடங்கு முடிகிறது. இதனால் மீண்டும் இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது கைவிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது. அநேகமாக இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று மந்திராலயா அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் மும்பையில் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மின்சார ரெயில்களில் அனைத்து பயணிகளையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story