தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் கணவர் மோசடி வழக்கில் திடீர் கைது


தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் கணவர் மோசடி வழக்கில் திடீர் கைது
x
தினத்தந்தி 6 Jan 2021 7:22 AM IST (Updated: 6 Jan 2021 7:22 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் கணவர் மோசடி வழக்கில் திடீரென்று கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை,

பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 9-ந் தேதி பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது, பூட்டிய அறைக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்த வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

அவரது கணவர் ஹேம்நாத் (வயது 31) செய்த சித்ரவதை தாங்காமல்தான், சித்ரா தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இதனால் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஹேம்நாத் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

திடீர் கைது

இந்த நிலையில் ஹேம்நாத் நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டில் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆஷா மனோகரன் என்பவரிடம் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஜெ.ஜெ.நகர் போலீசார், ஹேம்நாத் மீது ஒரு வழக்கு பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது அந்த வழக்கு கோர்ட்டு உத்தரவு அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இது போல மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மேலும் இருவரிடம் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

குண்டர் சட்டம் பாயுமா?

இது போல ஹேம்நாத் மீது பல்வேறு அடுக்கடுக்கான மோசடி புகார்கள் கூறப்படுகின்றன. மோசடி மன்னனாக வலம் வந்த ஹேம்நாத் விரித்த காதல் வலையில் சிக்கி நடிகை சித்ரா உயிரையும் விட்டுள்ளார். நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. ஹேம்நாத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Next Story