குற்ற செயல்களில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டம் அமைதியாக இருக்க வேண்டும், குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணனின் உத்தரவின்பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரின் பெயர் விவரங்கள், அவருடைய செயல்களை போலீசார் கண்காணித்து அந்தந்த போலீஸ் நிலையங்களில் அவர்களை பற்றி குற்ற சரித்திர பதிவேடு தயாரித்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் காவல் உட்கோட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, மணல் கடத்தல், கஞ்சா, லாட்டரி, புகையிலை பொருட்கள் விற்பனை, சாராய விற்பனை, மதுபாட்டில்கள் கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை விழுப்புரத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் அந்த செயலை கைவிட்டு திருந்தி வாழ வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம் கடந்த 6 மாதங்களாக அமைதியாக இருக்கிறது. இனியும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும். மாவட்டத்தில் எந்தவொரு குற்ற செயல்களும் நடக்கக்கூடாது. அதுதான் காவல்துறையின் முதல் குறிக்கோள். அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலும் அமைதியாக நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் எந்தவித பிரச்சினைகளிலும் ஈடுபடக்கூடாது. அதையும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று எண்ணி மனம் திருந்தி வாழ நினைத்தால் என்னை நேரில் வந்து சந்தியுங்கள், உதவி செய்கிறேன்.
மாவட்டத்தில் ரவுடியிச செயல்களில் யார், யாரெல்லாம் ஈடுபடுகின்றனரோ அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதுபோல் ரவுடிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், தங்களை காவல்துறை கண்காணிக்கவில்லை என்று கருத வேண்டும். ரவுடிகளை கண்காணிப்பதைப்போல் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் ரகசியமாக கண்காணித்து வருகிறோம். எனவே ரவுடிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் அவர்களுடனான தொடர்பை கைவிடுங்கள். ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால் அதில் ஈடுபட்ட ரவுடிகளை கைது செய்வதோடு மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் உடந்தையாக இருந்ததாக கருதி கைது செய்ய நேரிடும். ஆகவே குற்ற சம்பவங்களில் ஈடுபடும் எண்ணங்களை இதோடு கைவிட வேண்டும். அதையும் மீறி குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மேல் விழுப்புரத்தில் ரவுடியிசம் இருக்கக்கூடாது. சட்டத்திற்கு உட்பட்டு நடந்தால் உரிய மரியாதை. மீறினால் கடும் நடவடிக்கை என்று எச்சரிக்கை செய்கிறேன்.
கந்துவட்டி பிரச்சினைக்கு முடிவு
அதுபோல் மணல் கடத்தல், சாராயம், கஞ்சா விற்பனை செய்பவர்கள் முற்றிலும் அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். சாராயம் விற்பனையில் ஈடுபடுபவர்கள் திருந்தி வாழ முன்வந்தால் அவர்களின் மறுவாழ்வுக்காகவும், மீண்டும் அவர்கள் அந்த தொழிலில் ஈடுபடாமல் இருக்கவும் ஏதோ பெட்டிக்கடையோ, தள்ளுவண்டி வியாபாரமோ வைத்து பிழைப்பு நடத்த ஏதுவாக மாவட்ட கலெக்டரின் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ரூ.40 ஆயிரம் வரை பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும். மேலும் மறைமுகமாக ஒரு குடும்பத்தையே அழிக்கக்கூடியது ஆன்லைன் லாட்டரி விற்பனை. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதபோல் கந்துவட்டி பிரச்சினைக்கும் ஒரு முடிவு கட்டப்படும். கந்துவட்டி வசூலிப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்பாக கந்துவட்டி பிரச்சினை தொடர்பாக போலீசார் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகிக்க உள்ளோம். அதில் செல்போன் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்ணுக்கு கந்துவட்டி தொடர்பாக பிரச்சினைகள் பற்றி புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், விநாயகமுருகன், மகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story