பொங்கல் நெருங்கி வரும் நிலையில் மழை காரணமாக மண்பானை தயாரிக்கும் பணி பாதிப்பு - தொழிலாளர்கள் வேதனை
மழை பெய்து வருவதால் மண்பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
பொங்கல் என்றாலே உடனே நினைவுக்கு வருவது கரும்பும், மண்பானையும் தான். திருவண்ணாமலையில் அரடாப்பட்டு, எடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மண்பானைகள் தயாரிக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீதோஷ்ண நிலை காரணமாக தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசுவதினாலும், அவ்வபோது பெய்து வரும் சாரல் மழையினாலும் மண்பானைகள் தயாரிக்கும் பணிகள் பாதிக்கபட்டு உள்ளதாக தொழிலாளர்கள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து எடப்பாளையம் பகுதியில் மண்பானை தயாரித்து வரும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், களிமண் மூலம் மண்பானைகளை கை சக்கர எந்திரம் அல்லது மின்சாரத்தால் இயங்கும் சக்கர எந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்காக மண்பானைகள், சட்டிகள், மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. நிவர், புரெவி புயலால் பெய்த மழையின் காரணமாக மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது.
பின்னர் வெயில் அடித்தால் மீண்டும் பானை செய்யும் பணியை தொடங்கலாம் என்று எண்ணி இருந்தோம். கடந்த சில தினங்களாக சீதோஷ்ண நிலை மாற்றத்தினால் பகல் நேரத்திலும் குளிர்ந்த காற்று வீசுகிறது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தயார் செய்யப்பட்ட பானைகள் காய வைக்க முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு உள்ளோம். இதனால் மண்பானைகள் தயாரிக்கும் பணி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் விழாவை எங்களால் கொண்டாட முடியுமா என்று வேதனையாக உள்ளது. எனவே இங்கு மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு நிவாரண உதவித் தொகை வழங்க அரசு அல்லது மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story