தபால் ஓட்டு போடுவதற்கு 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும் - சிறப்பு பார்வையாளர் உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஷோபனா தெரிவித்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், உதவி கலெக்டர்கள் கணேஷ், ஷேக்மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குனரும், வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளருமான ஷோபனா கலந்து கொண்டு சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களின்படி பெயர்கள் முறையாக சேர்க்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி 90 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துள்ளது.
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகளை வழங்க கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் தபால் ஓட்டு போடுவதற்காக 80 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் பட்டியலை தயாரிக்க வேண்டும். வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன. எனவே வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப பணியாளர்களையும் அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், உதவி கமிஷனர்கள் மதிவாணன், வெங்கடேசன், செந்தில், வேலூர் தாசில்தார் ரமேஷ், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வேலூர் தொரப்பாடி, காட்டுப்புத்தூர், கேசவபுரம் ஆகிய கிராமங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய விண்ணப்பித்தவர்களிடம் நேரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஷோபனா கள ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story