சினிமாக்காரனை பார்க்க வந்த கூட்டமா? தமிழ்நாட்டை மாற்ற வந்த கூட்டம் - கிருஷ்ணகிரியில், கமல்ஹாசன் ஆவேசம்


சினிமாக்காரனை பார்க்க வந்த கூட்டமா? தமிழ்நாட்டை மாற்ற வந்த கூட்டம் - கிருஷ்ணகிரியில், கமல்ஹாசன் ஆவேசம்
x
தினத்தந்தி 6 Jan 2021 5:39 PM IST (Updated: 6 Jan 2021 5:39 PM IST)
t-max-icont-min-icon

சினிமாக்காரனை பார்க்க மக்கள் கூட்டம் வரும் என்று சிலர் கூறுகிறார்கள். என்னை காண வரும் மக்கள் கூட்டம், தமிழ்நாட்டை மாற்ற வந்த கூட்டம் என்று கிருஷ்ணகிரியில் கமல்ஹாசன் ஆவேசமாக பேசினார்.

கிருஷ்ணகிரி,

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். அவர் நேற்று இரவு தர்மபுரி மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தார்.

அங்கு காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மக்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த முறை இங்கு வந்த போது உங்களை சந்திக்க மீண்டும் வருகிறேன் என்று கூறினேன். அதே போல இன்றைய தினம் வந்துள்ளேன்.

தமிழகத்தை சீரமைப்போம் என்ற குரலுடன் இன்றைய தினம் இங்கு வந்துள்ளோம். இந்த புத்தாண்டில் இந்தியன் பில்லர் தன்னார்வ அமைப்பை சேர்ந்த மணிவேல் தலைமையில் 100 பேர் மக்கள் நீதி மய்யத்தில் இன்று இங்கு இணைந்துள்ளனர்.

என்னுடன் வந்துள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு இங்கு ஏற்கனவே (கலெக்டர்) பணியாற்றி உள்ளார். அரசு ஊழியராக உங்களிடத்தில் பணியாற்றிய அவர் இப்போது மக்கள் ஊழியம் செய்ய வந்துள்ளார். கோடை காலத்தில் இந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அது இன்னும் தீர்க்கப்படவில்லை.

இங்குள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும். கற்கால மனிதர்கள் இந்த பகுதியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், சான்றுகள் சிதைந்துள்ளன. அதை பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. சினிமாக்காரனை பார்க்க மக்கள் கூட்டம் வரும் என்று சிலர் கூறுகிறார்கள். இங்கிருக்கும் நீங்கள் படம் பிடித்து அதை காட்டுங்கள்.

இது மக்கள் கூட்டம் அல்ல. தமிழ்நாட்டை மாற்ற வந்த கூட்டம். மக்கள் நீதிமய்யம் ஆட்சிக்கு வந்தால் நல்ல பல திட்டங்கள் வரும். புதிய அரசியல் மாற்றத்திற்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். தமிழ்நாட்டை சீரமைக்க வந்துள்ள கூட்டம் இது. வறுமை கோட்டிற்கு கீழ் ஏராளமான மக்கள் உள்ளனர். அவர்களை செழுமை கோட்டிற்கு மேல் கொண்டு வர வேண்டும்.

படித்து வேலை இன்றி தவிக்கும் இளைஞர்கள் பலர் உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படித்த இளைஞர்கள் பிறருக்கு வேலை கொடுக்க வேண்டிய அளவுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம். நாங்கள் தற்போது திறன் மேம்பாட்டு மையம் அமைத்து வருகிறோம். நான் பிறந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறு நகரங்கள் கூட, பெரு நகரங்களுக்கு இணையான வசதிகள் அனைத்தையும் பெறும். வீட்டிற்கு ஒரு கணினி வழங்குவோம். இதை தான் முந்தைய ஆட்சியாளர்கள் வழங்கி உள்ளார்களே என நினைக்க வேண்டாம். இது மக்களின் தேவைகளை அரசுக்கு தெரிவிப்பதற்காக வழங்கப்படுவதாகும். மக்களுக்கு தேவைகள் உள்ளன. அவை உங்களின் உரிமைகள். அதை நிறைவேற்ற வேண்டியது நல்ல அரசின் கடமை.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து இரவு ஓசூரில் தங்கிய கமல்ஹாசன்,, இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பர்கூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கிருந்து அவர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

நேற்றைய பிரசார நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் ஆர்.வடிவேல் (கிருஷ்ணகிரி மத்தி) , பி.ஜெயபால் (கிருஷ்ணகிரி மேற்கு), கே.முருகேசன் (கிருஷ்ணகிரி கிழக்கு), வக்கீல் பிரிவு மாநில துணை செயலாளர் ஆர்.கே.ரவிசங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story