தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கைத்தறி, நெசவு தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க முயற்சி எடுப்போம் - சேலத்தில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு


தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கைத்தறி, நெசவு தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க முயற்சி எடுப்போம் - சேலத்தில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 6 Jan 2021 7:09 PM IST (Updated: 6 Jan 2021 7:09 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கைத்தறி மற்றும் நெசவு தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க முயற்சி எடுப்போம் என்று சேலத்தில் தயாநிதி மாறன் எம்.பி. உறுதியளித்தார்.

சேலம்,

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தயாநிதிமாறன் எம்.பி. நேற்று முன்தினம் சேலம் வடக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

தொடர்ந்து நேற்று 2-வது நாளாக அவர் தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். காலையில் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தயாநிதிமாறன் எம்.பி. பேசியதாவது:-

நாட்டில் 4 சதவீதமே உள்ள உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை மோடி அரசு வழங்கி உள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி அரசும், அன்புமணி ராமதாசும் ஆதரவு அளித்துள்ளனர். அவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரிடம், பொதுமக்கள் கொரோனா காலத்தில் தங்களுடைய தொழிலையும், குடும்பத்தையும் காப்பாற்ற 2 மாதங்களுக்கு தலா ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு முதல்-அமைச்சர் மறுத்துவிட்டார்.

தற்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 கொடுக்கிறார். இது பொங்கல் பரிசு அல்ல, ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் பொங்கல் பரிசாக ரூ.180 கோடி கொடுக்கிறீர்களே என்று கேட்டதற்கு, ரூ.2,500 வாங்கி அதை நேராக டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு சென்று கொடுத்துவிட்டு செல்வார்கள் என்றும், இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படாது என்றும் அவர் கூறி உள்ளார். இதன் மூலம் அவர் தமிழக மக்களை இழிவாக நினைக்கிறார்.

டாக்டராக வேண்டும் என்று கனவு கண்டவர்களை நீட் தேர்வை கொண்டு வந்து அதை சிதைத்து விட்டார்கள். சேலத்தில் மூடிக்கிடக்கும் தொழில்நுட்ப பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து அவர் குகை பகுதியில் விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள், சாயப்பட்டறை தொழிலாளர்கள் மற்றும் நிலத்தரகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, நூல் விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான விசைத்தறி, கைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஆகையால் நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன் வைத்தனர்.

இதையடுத்து தயாநிதிமாறன் எம்.பி. பேசியதாவது:-

கூட்டுறவு முறை மூலமாக நூல் உற்பத்தி செய்வது அல்லது நூல்களை வாங்கி நெசவாளர்களுக்கு கொடுப்பது என்ற முறை இருந்தது. ஆனால் ஏதோ காரணத்திற்காக அது நிறுத்தப்பட்டது. நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் இதை மீண்டும் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். சாயப்பட்டறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு தான் முன்வரவேண்டும். இல்லையெனில் அதற்கான சட்ட சிக்கலை தீர்க்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கிறது. ஆனால் அப்போது தமிழக அரசு, வரி தங்களை பாதிக்கிறது என்று எடுத்து கூறியது கிடையாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கைத்தறி மற்றும் நெசவு தொழில் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க அனைத்து முயற்சியையும் எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து அவர் லைன்மேடு பகுதியில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அம்மாபேட்டை, தாதகாப்பேட்டை பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

Next Story