திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் பறிமுதல்


திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Jan 2021 8:20 PM IST (Updated: 6 Jan 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.2¼ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

அனுப்பர்பாளையம்,

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் ஊழல்களை தடுக்கும் விதமாக தற்போது தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அடிக்கடி அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் உள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.

முன்னதாக வழக்கம் போல நேற்று அலுவலகம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. வட்டார போக்குவரத்து அதிகாரி குமார் உள்பட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணியில் இருந்தனர். மேலும் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களும், புரோக்கர்களும் அலுவலகத்திற்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மாலை 6.30 மணிக்கு திருப்பூர் மாநகர லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் சென்று சோதனை நடத்தினர்.

இந்தசோதனை இரவு 11 மணிவரை நடந்தது. அப்போது அலுவலகத்திற்கு வந்த விண்ணப்பங்கள் மற்றும் அதற்கான கட்டண தொகைகளை சரி பார்க்கும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 10-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினார்கள்.

வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த சோதனையால் நேற்று மாலை 6 மணி முதல் இ்ரவு 11 மணிவரை பரபரப்பாக காணப்பட்டது.

சோதனையை முடித்து விட்டு ெவளியே வந்த திருப்பூர் மாநகர லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி கூறியதாவது:- வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இன்று (நேற்று) வந்து சென்றபொதுமக்களிடம் விசாரணை நடத்தப்படும். அப்போது எது லஞ்சப்பணம் என்பது தெரியவரும். திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நடந்தசோதனையில் சிக்கிய 3 ஆவண எழுத்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Next Story