சென்னையில் மீன்பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்தது: கடலில் தத்தளித்த 5 மீனவர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்
மீன்பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்ததால், 200 மீட்டர் தூரம் நீந்தி சென்று, கடலில் தத்தளித்த 5 மீனவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
படகு கவிழ்ந்தது
சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 55), ஜெயசீலன் (36), மதன் (35), மகேந்திரன் (45), முருகன் (50) ஆகிய 5 பேர் மீன்பிடிக்க சென்று விட்டு நேற்று காலை பைபர் படகில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருந்தபோது, துண்டாகி கிடந்த வலை ஒன்று படகு என்ஜினில் சிக்கியது.இதனால் படகு கடலில் கவிழ்ந்தது.
இதில் படகில் சென்ற 5 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், மீனவர் ஆறுமுகம் நீந்தமுடியாமல், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
கடலில் மீனவர்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதை கண்ட மெரினா தீயணைப்பு நிலைய வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களை தூக்கிக்கொண்டு கடலை நோக்கி ஓடினர்.
5 பேரை மீட்டனர்
பின்னர் தீயணைப்பு நீச்சல் வீரர்கள் கடலில் குதித்து பாதுகாப்பு உபகரணங்களோடு, 200 மீட்டர் தூரம் நீந்திச்சென்று, கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 5 பேரிடம் கொடுத்து பத்திரமாக மீட்டு கரைக்கு
கொண்டு வந்தனர்.
பின்னர் அனைவருக்கும் முதலுதவி அளித்து, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த ஆறுமுகத்தை உடனடியாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.
பாராட்டு
கடலில் தத்தளித்த மீனவர்களை, உடனடியாக மீட்டு முதலுதவி அளித்த வீரர்களை தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு, இணை இயக்குனர் பிரியா ரவிசந்திரன், மத்திய மாவட்ட அலுவலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகளும், பொதுமக்களும் வெகுவாக பாரட்டினர்.
மேலும் துரிதமாக செயல்பட்ட வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story