சென்னையில் மழைநீரை வெளியேற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
கடைக்கு அருகே தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்ற மின்மோட்டார் ‘சுவிட்ச்சை ஆன்’ செய்தபோது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மழைநீரை வெளியேற்ற முயற்சி
சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் நேரு நகர் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒரு கடையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெரு (வயது 35), பீகார் மாநிலத்தை சேர்ந்த பிங்கு (22) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் கடைக்கு அருகில் மழைநீர் தேங்கி இருந்தது. அந்த மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் முயற்சியில் பெரு, பிங்கு இருவரும் நேற்று ஈடுபட்டனர்.
மின்சாரம் தாக்கியது
இதற்காக மின்மோட்டாரில் குழாயை இணைத்துவிட்டு மின்சார ‘சுவிட்ச்சை’ பிங்கு போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதால் அலறினார்.
உடனே அருகில் நின்றிருந்த பெரு, பிங்குவை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் 2 பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.
2 பேரும் பலி
இதனால் அதிர்ச்சி அடைந்த கடையில் இருந்த சக ஊழியர்கள் 2 பேரையும் மீட்டு ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் பெரு, பிங்கு இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தரமணி போலீஸ் உதவி கமிஷனர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story