பல்லாவரம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தவர் மாரடைப்பால் சாவு
பல்லாவரம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்த முதியவர், மாரடைப்பால் உயிரிழந்தார்.
என்ஜினீயர் மீது தாக்குதல்
சென்னையை அடுத்த பல்லாவரம் மின்வாரிய அலுவலகத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருபவர் ஹரிஹரன். கடந்த 1-ந்தேதி மல்லிகாநகரில் மின்வாரிய ஊழியர்களுடன் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஹரிகரனை அதே பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பல்லாவரம் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நேற்று நவீன்(வயது 30), மணிகண்டன்(24), ஸ்டாலின்(34) ஆகியோரை பிடித்து பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்கு வந்தவர் சாவு
நித்தியானந்தம் தலைமறைவாக உள்ளதால் அவருடைய தந்தை ஏழுமலை(62) என்பவரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் வருமாறு போலீசார் அழைத்தனர். இதற்காக நேற்று மாலை பல்லாவரம் போலீஸ் நிலையம் வந்த ஏழுமலை, திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏழுமலை மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து ஏழுமலையின் உடலை அவரது உறவினர்கள் வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story