மோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து ரூ.1½ கோடி பெற்றேனா? - நடிகை குட்டி ராதிகா பரபரப்பு பேட்டி
மோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து ரூ.1½ கோடி பெற்றது குறித்த புகாருக்கு நடிகை குட்டி ராதிகா பரபரப்பாக பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவை சேர்ந்த யுவராஜ் சாமி என்பவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா தலைவர்களின் பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், நடிகை குட்டி ராதிகா குமாரசாமிக்கு ரூ.1½ கோடி கொடுத்துள்ளதாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நடிகை குட்டி ராதிகா குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
யுவராஜ் சாமி எங்கள் குடும்ப ஜோதிடர். அவர் எங்கள் தந்தையின் நண்பர். அவர் எங்கள் குடும்பத்துடன் 17 ஆண்டுகளாக நட்பில் இருந்து வருகிறார். எனது எதிர்காலம் குறித்து அவர் கூறிய ஜோசியம் இதுவரை பலித்துள்ளது. இதனால் அவர் மீது எனக்கு மட்டுமின்றி எங்கள் குடும்பத்தினருக்கு நல்ல மரியாதை உள்ளது.
ஒரு வரலாற்று படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. இதுகுறித்து யுவராஜ் சாமி என்னிடம் வந்து புதிய படம் ஒன்றை எடுக்க விரும்புவதாக கூறினார். "நாட்டிய ராணி சாந்தலா" என்ற படத்தை எடுக்க நாங்கள் பேசி முடிவு செய்தோம்.
தனது மகள் மற்றும் உங்களின் திரைப்பட நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரிக்கலாம் என்று அவர் கூறினார். அதற்கு நான், ஒரே நிறுவனத்தின் சார்பில் படத்தை தயாரிக்க வேண்டும் என்று சொன்னேன். இதையடுத்து அவரது மகளின் பெயரில் உள்ள நிறுவனத்தின் கீழ் படத்தை தயாரிப்பது என்று முடிவு செய்தோம். இந்தபடத்தில் நடிப்பதற்காக எனக்கு முதல்கட்டமாக ரூ.15 லட்சம் எனது வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அதன் பிறகு அவர் தனது உறவினர் மூலம் ரூ.60 லட்சம் அனுப்பினார்.
அவ்வளவு தான். ரூ.1½ கோடி எனது வங்கி கணக்கிற்கு அவர் அனுப்பியதாக வந்த தகவல் தவறானது. புதிய படம் குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று நான் கூறினேன். அதற்கு அவர் நான் தற்போது பணியில் பரபரப்பாக இருப்பதாகவும், ஒப்பந்தத்தை பின்னர் செய்து கொள்ளலாம் என்று கூறினார். கொரோனா காரணமாக நான் பெங்களூருவில் இருக்கவில்லை. மங்களூருவில் தங்கி இருந்தேன். அதனால் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியவில்லை. சினிமா விஷயத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காக அவருடன் எனக்கு தொடர்பு இல்லை. அவர் மிக நல்லவர் என்று நாங்கள் நினைத்திருந்தோம். அவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இதுவரை நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. நாங்கள் தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். அவருக்கு பெரிய பெரிய நபர்களுடன் தொடர்பு இருக்கிறது. அவ்வாறு இருக்கையில் நாங்கள் அவருடன் தொடர்பில் இருப்பது என்பது ஒரு சிறிய விஷயம். நான் யாரையும் ஏமாற்றவில்லை. எந்த தவறும் செய்யவில்லை.
என் மீது வந்த புகாருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளேன். எனது சகோதரர் வங்கி கணக்கிற்கு பணம் எதுவும் வரவில்லை. அவர் என்ஜினீயரிங் கல்லூரி நடத்தவில்லை என்று குட்டி ராதிகா கூறினார்.
நடிகை குட்டி ராதிகா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் 2-வது மனைவி ஆவார். ஆனால் தற்போது அவா் குமாரசாமியை விட்டு பிரிந்து வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story