பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்: பெங்களூருவில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்: பெங்களூருவில் நடந்தது
x
தினத்தந்தி 7 Jan 2021 6:18 AM IST (Updated: 7 Jan 2021 6:18 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெங்களூருவில் நேற்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் தங்களிடம் படிக்கும் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்தன. அரசு சார்பிலும் ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. கொரோனாவால் பள்ளிகளை தொடங்க முடியாததால் பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்களது வேலையை இழந்தனர். ஏராளமானோர் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த தங்களுக்கு அரசு உதவிதொகை வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து ஜனவரி 6-ந் தேதி (நேற்று) பெங்களூருவில் போராட்டம் நடத்தப்படும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த தங்களுக்கு அரசு உதவி தொகை வழங்காததை கண்டித்தும், ரூ.10 ஆயிரத்திற்கு கீழ் சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக உதவி தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பெங்களூருவில் போராட்டம் நடந்தது. பெங்களூரு மவுரியா சர்க்கிளில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் சுதந்திர பூங்காவுக்கு சென்று ஒன்றாக கூடி போராட்டம் நடத்தினர்.

அப்போது தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த சந்தர்ப்பத்தில் சுதந்திர பூங்கா பகுதியில் மழை பெய்தது. ஆனால் மழையிலும் தங்களது போராட்டத்தை ஆசிரியர்கள் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.

Next Story