எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்க பெற்றோர் ஆதரவு கருத்து கேட்பு கூட்டத்தில் தகவல்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்க பெற்றோர் ஆதரவு கருத்து கேட்பு கூட்டத்தில் தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2021 6:46 AM IST (Updated: 7 Jan 2021 6:46 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்க கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர்.

புதுக்கோட்டை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் மூடப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில் ஊரடங்கில் பெருமளவு தளர்வு அளிக்கப்பட்டு விட்டன. பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற வேண்டி உள்ளதால் அவர்களது நலன் கருதி பள்ளிகளை திறக்கலமா? என கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் பலர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என அரசு முடிவு செய்தது.

பொதுத்தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த அறிவித்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் முதல் வாட்ஸ்-அப், ஆன்-லைன் மூலம், கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் படித்து கொண்டிருக்கிறார்கள். வகுப்புகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை விட்டு அமருதல், முக கவசம் அணிதல் கட்டாயம், கிருமி நாசினிகளை கொண்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என உறுதிகூறுகிறோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும்' என்றார்.

பள்ளிகளை திறக்க ஆதரவு

கூட்டத்தில் பெற்றோர் தரப்பில் பேசியர்களில் பலர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்தனர். சிலர் கூறுகையில், ‘மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை அறிவித்துவிட்டது. மாநில அரசும் தேர்வு நடத்த வேண்டிய நிலையில் உள்ளது. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முக்கியம். அதேநேரத்தில் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு திறக்கலாம். பொங்கல் பண்டிகை முடிந்த பின் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம். வகுப்புகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களை அமர வைக்க வேண்டும்' என்றனர்.

தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டம் இன்றும் (வியாழக்கிழமை) சில பள்ளிகளில் நடைபெற உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட பின் அவர்களது கருத்துகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து உள்பட ஆசிரியைகள், மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

கீரமங்கலம்

இதேபோல் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் மற்றும் பலர் பங்கேற்று பெற்றோர்களின் கருத்துகளைகேட்டறிந்தனர்.

Next Story