சஞ்சய் ராவத் மனைவியிடம் மீண்டும் விசாரணை நடத்த சம்மன்: அமலாக்கத்துறை அனுப்பியது
பி.எம்.சி. வங்கி மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் மனைவியிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
மும்பை,
பி.எம்.சி. வங்கி மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் மனைவியிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
பி.எம்.சி. வங்கி மோசடியில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வங்கியில் இருந்து ரூ.95 கோடி கடன் பெற்றதாக குருசிஸ் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான பிரவின் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதில், அவரின் வங்கி கணக்கில் இருந்து அவரது மனைவி மாதுரிக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் அனுப்பியதும், அவர் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்துக்கு வட்டி இல்லா கடனாக ரூ.55 லட்சம் மாற்றியதும் தெரியவந்தது. அந்த பணத்தில் வர்ஷா ராவத், தாதர் கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியதும் தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திற்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி அவர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வர்ஷா ராவத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி அவர் வருகிற 11-ந் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே வர்ஷா ராவத்திடம் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில், அவரும், பிரவின் ராவத்தும் அவானி கட்டுமான நிறுவனத்தின் தொழில் பங்குதாரர்கள் என்று தெரியவந்தது. இந்த நிலையில் வர்ஷா ராவத்திடம் கூடுதல் தகவல்களைகேட்டு பெற அமலாக்கத்துறை திட்டமிட்டு இருப்பதால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி தங்களது கூட்டணி கட்சிகளின் குடும்ப உறுப்பினர்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story