கரூர் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் பிணமாக மிதந்தான் போலீசார் விசாரணை


கரூர் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் பிணமாக மிதந்தான் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Jan 2021 7:34 AM IST (Updated: 7 Jan 2021 7:34 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் பிணமாக மிதந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம் ஏ.வி.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களது, வளர்ப்பு மகன் நாட்ராயன் என்கிற தர்ஷன் (வயது 7). இவன், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தர்ஷன் வீட்டில் இருந்து வந்தான்.

இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி விளையாட சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசில் பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வந்தனர்.

கிணற்றில் பிணம்

இந்தநிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சிறுவனின் பிணம் மிதப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர், சிறுவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சிறுவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமான தர்ஷன் என்பது தெரிய வந்தது.

விளையாட சென்ற சிறுவன் கிணற்றில் பிணமாக மிதந்தது எப்படி?, அவனை யாரேனும் அழைத்து சென்று கிணற்றில் தள்ளி கொலை செய்தனரா? அல்லது விளையாடும்போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தானா? என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story