தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்தது; 2 பேர் பலி; 5 பேர் படுகாயம்


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்தது; 2 பேர் பலி; 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Jan 2021 9:22 AM IST (Updated: 7 Jan 2021 9:22 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்த விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு...
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேல ஈரால், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம், கடலையூரைச் சேர்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மாலையில் பாத யாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

இவர்கள் இரவு 11 மணி அளவில் ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் நான்கு வழிச்சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

பக்தர்கள் கூட்டத்தில்புகுந்த லாரி
அப்போது கமுதியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. அந்த லாரி, பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் லாரிக்கு அடியில் சிக்கிய பக்தர்கள் உடல் நசுங்கி பலத்த காயம் அடைந்தனர்.

இதில் மேல ஈராலை சேர்ந்த பண்டாரம் மகன் குமார் (37), கிருஷ்ணன் மகன் முகேஷ்குமார் (12) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

5 பேர் படுகாயம்
மேலும் மேல ஈராலை சேர்ந்த சித்திரை செல்வன் மகன் ஆதிேமாகன் (13), முருகன் மகன் ராகுல் (12), கடலையூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அங்கப்பன் (23), தமிழ்செல்வன் (23), தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த கண்ணன் மகன் பிரேம்குமார் (17) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.. விபத்து நிகழ்ந்ததும், சிறிது தூரத்தில் லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

டிரைவருக்கு வலைவீச்சு
படுகாயம் அடைந்த ஆதிமோகன் உள்ளிட்ட 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த குமார், முகேஷ்குமார் ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

விபத்தில் இறந்த குமார் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இறந்த முகேஷ்குமார், 7-ம் வகுப்பு படித்து வந்தான். பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story