‘கோவின்’ செயலி மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்; சுகாதாரத்துறை அதிகாரி தகவல்


கோவின் செயலி
x
கோவின் செயலி
தினத்தந்தி 7 Jan 2021 10:03 AM IST (Updated: 7 Jan 2021 10:03 AM IST)
t-max-icont-min-icon

‘கோவின்’ செயலி மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரி கூறினார்.

தடுப்பூசி ஒத்திகை
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களை காக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதி யாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கோவையில் 5 ஆஸ்பத்திரிகள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டால் அவற்றை பதப்படுத்தி பாதுகாக்க 64 குளிர்பதன பெட்டிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதன் மூலம் 124 லிட்டர் மருந்துகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்க முடியும்.

கொரோனா தடுப்பூசி ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

செயலி மூலம் முன்பதிவு
கொரோனா தடுப்பூசி பொங்கலுக்கு பிறகு கோவையில் பயன்பாட்டுக்கு வரலாம். முதல்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசியை பெற மத்திய அரசு அறிமுகப் படுத்தி உள்ள கோவின் என்ற ஆப் (செயலி) மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த செயலியில் கொரோனா தடுப்பூசி தேவையானவர்கள் தங்களது பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த உடன் அவர்களுக்கு எந்த ஆஸ்பத்திரியில், எந்த தேதியில், எந்த டாக்டர் மூலம் ஊசி செலுத்தப்படும் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

கண்காணிப்பு
அந்த தேதியில் ஆஸ்பத்திரிக்கு சென்றால் அவர்களது விவரங்கள் அடையாள அட்டை கொண்டு சரிபார்க்கப்படும். பின்னர் ஆஸ்பத்திரி யில் டாக்டர்கள் அவர்களை அரை மணிநேரம் கண்காணிப்பார்கள். கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களாக பிரிக்கப்பட்டு செலுத்தப்படும். முதல் ஊசி செலுத்தப்பட்டு 28 நாட்கள் கழித்து மீண்டும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதும் அவர்கள் தடுப்பூசியை போடுவதற்கு முன்பும் பின்பும் கண்காணிக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story