விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியது


விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியது
x
தினத்தந்தி 7 Jan 2021 10:32 AM IST (Updated: 7 Jan 2021 10:32 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

விழுப்புரம்,

வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்திருந்தாலும் பருவமழை அடுத்த வாரம் வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நள்ளிரவிலும் விட்டு விட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது. தொடர்ந்து, நேற்றும் இந்த மழை நீடித்தது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்த நிலையில் அதன் பிறகு பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரமாக கொட்டி தீர்த்தது. பின்னர் சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை பரவலாக மழை தூறிக்கொண்டே இருந்தது. இவ்வாறு நேற்று இரவு வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இடையிடையே அவ்வப்போது கனமழையாகவும் வெளுத்து வாங்கியது.

இதேபோல் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், மயிலம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், கடலோர கிராமங்களான மரக்காணம், கோட்டக்குப்பம், பொம்மையார்பாளையம், கூனிமேடு, நொச்சிக்குப்பம், ஆரோவில், வானூர், நடுக்குப்பம், அனிச்சங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் கொட்டி தீர்த்தது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர், பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக விழுப்புரம் நகரில் புதுச்சேரி சாலை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை, நேருஜி சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இவ்வாறு சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். மழைநீரில் வாகனங்கள் தத்தளித்தபடி ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன.

மழையின் காரணமாக பகல் நேரத்திலும் கருமேகங்கள் சூழ்ந்து இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். சாலைகளில் தேங்கிய தண்ணீரால் விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் வேலைக்கு சென்ற பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மழையில் நனைந்தபடி சென்றனர்.

அதே நேரத்தில் நேற்று பெய்த பலத்த மழையினால் கிராமப்புறங்களில் விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அதனை பயிரிட்ட விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளனர்.

Next Story