பணி நிரந்தரம் செய்யக்கோரி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2021 10:44 AM IST (Updated: 7 Jan 2021 10:44 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிரேசிபொன்மலர் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், செயலாளர் ஜெயக்குமார், இணை செயலாளர் அசோகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் செவிலியர் மேம்பாட்டு சங்க மாவட்ட பொருளாளர் அறிவுக்கரசி, துணைத்தலைவர் ஹெலன் பிரீத்தா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். செயலாளர் பூங்கொடி, பொருளாளர் இளையாழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் ரவிக்குமார், அரசு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது பலத்த மழை பெய்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் குடைபிடித்துக்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் செவிலியர்கள் சுகுணா, கனகவேல், சாமுண்டீஸ்வரி, ரம்யா, சுமதி, பூங்கொடி, தமிழரசி, ஜீனத் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர்கள், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story