மனித-வனவிலங்கு மோதல்: காட்டு யானைகளின் நடமாட்டத்தை தெரிவிக்க வாட்ஸ்-அப் குழுக்கள் அமைப்பு; வனத்துறை நடவடிக்கை
மனித வனவிலங்கு மோதலை தடுக்கவும், காட்டு யானைகளின் நடமாட்டத்தை தெரிவிக்கவும் வாட்ஸ்-அப் குழுக்கள் அமைத்து வனத்துைற நடவடிக்கை எடுத்து உள்ளது.
காட்டு யானைகள் அட்டகாசம்
கூடலூர் வனக்கோட்டத்தில் ஓவேலி, தேவாலா, கூடலூர், சேரம்பாடி பிதிர்காடு மற்றும் நாடுகாணி தாவரவியல் பூங்கா மைய வனச்சரகங்கள் உள்ளன. கேரளா- கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் பகுதி என்பதால் இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
குறிப்பாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அவை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால், மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஒரே வாரத்தில் 3 பேரை காட்டு யானை கொன்றது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கருத்து கேட்பு கூட்டம்
இந்த நிலையில் கூடலூர் வனக் கோட்டத்தில் மனித-வன விலங்கு மோதல் குறித்து தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்புவது தொடர்பாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் ஊட்டியில் நடந்தது.
இதில் கூடலூர் வன அதிகாரி சுமேஷ் சோமன், உதவி வன பாதுகாவலர் விஜயன் மற்றும் வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடலூர் வன அதிகாரி சுமேஷ் சோமன், உதவி வனப்பாதுகாவலர் விஜயன் ஆகியோர் கூறியதாவது:-
வாட்ஸ்-அப் குழுக்கள்
கூடலூர் வனக்கோட்டத்தில் காலியாக உள்ள நாடுகாணி தாவரவியல் மைய பூங்கா, சேரம்பாடி ஆகிய சரகங்களில் புதிதாக ஆனந்த்குமார், பிரசாத் ஆகிய 2 வனச்சரகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கூடலூர் கோட்டத்தில் பணியாற்றி வரும் யானை கண்காணிப்பு ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியம் வழங்க நிதி பெறப்பட்டு உள்ளது.
தொடர்ந்து கூடலூர் வனக்கோட்டத்தில் சேப்-வே என்கிற 2 குழுக்கள் அமைத்து உயரதிகாரிகள், பொதுமக்கள் செல்போன்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதேபோல் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து பொதுமக்களின் பிற வாட்ஸ்அப் குழுக்களுக்கும் தகவல்கள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
மோதல்கள் தடுக்கப்படும்
இதன் மூலம் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து உடனுக்குடன் பொதுமக்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்படுவதால், மனித-வனவிலங்கு மோதல்கள் தடுக்கப்படும். இதேபோல் மனித, வன விலங்கு மோதல் அதிகம் உள்ள 30 கிராமங்களில் குழுக்கள் அமைத்து கண்காணித்து தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story