ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தாக்குதல் இல்லை; கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தாக்குதல் இல்லை என கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
பறவை காய்ச்சல்
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை.
பறவை காய்ச்சல் நோய் என்பது பறவை இனங்களை தாக்கும் ஒரு வைரஸ் தொற்று நோய். இந்த நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீர்ப்பறவைகள் மற்றும் வனப்பறவைகள் ஆகியவற்றை முக்கியமாக தாக்கும். பறவை காய்ச்சல் வைரஸ் கிருமிகள் பல வகைகள் இருந்தாலும் எச்-5 என்-1 என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது.
50 அதிவிரைவு குழுக்கள்
நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழிக் கழிவுகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் கோழித்தீவனம் மூலமாக இந்நோய் பரவுகிறது. இந்நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லை. நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகளையும், உயிர் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றவேண்டும்.
கால்நடை பராமாரிப்புத்துறை மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகள், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மற்றும் புறக்கடை கோழிகளை நேரில் பார்வையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
கோழித்தீவனம்
பறவை காய்ச்சல் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க ஈரோடு மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள் கேரளாவில் இருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழித்தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்க கூடாது. கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக கேரளாவில் இருந்து குஞ்சு பொரிப்பதற்கான முட்டைகள், வாத்துகள் மற்றும் கோழிகள் ஏதேனும் வாங்கப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் முறையாக கோழி இறப்பு குழியில் கிருமிநாசினி தெளித்து புதைக்க வேண்டும். கோழிப்பண்ணையினுள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே அனுமதிக்க வேண்டும். கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்பு ஏதும் எற்பட்டால் உடனடியாக ஈரோடு கோழிநோய் ஆராய்ச்சி ஆய்வுக்கூட உதவி இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும்.
காகித அட்டை
பண்ணையாளர்கள் வேறு பண்ணைகள் மற்றும் பறவைகள் சரணாலயம் செல்வதையும் தங்கள் பண்ணைக்குள் பார்வையாளர்களை அனுமதிப்பதையும் தவிர்க்க வேண்டும். பிற மாநிலத்திற்கு முட்டைகளை எடுத்து செல்வதற்கு கண்டிப்பாக காகித அட்டை பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேற்படி காகித அட்டைகளை எக்காரணத்தை கொண்டும் திரும்ப எடுத்துவர கூடாது.
மேற்காணும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பறவை காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story