ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு ஆற்றுக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆற்றுக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு கிராம மக்கள், விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி,
ஆரணியை அடுத்த நெல்வாய்பாளையம் பகுதியில் படவேடு, களம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆற்றின் உபரிநீர் வரும் கால்வாயை பலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த ஆற்றுக் கால்வாயில் வரும் உபரிநீர் சுமார் 14 ஏரிகளுக்கு சென்றடையும். அதன் மூலம் விவசாயிகள் பலர் பயன் அடைவார்கள். கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடமும், போளூர் தாலுகா அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்று காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளர் பிரசாந்த், மாவட்ட துணைத்தலைவர் அருணகிரி, ஆரணி நகர தலைவர் டி.ஜெயவேல், மாவட்ட ஆதிதிராவிடர் பிரிவு தலைவர் சேகர் மற்றும் கிராம மக்கள், விவசாயிகள் என 200-க்கும் மேற்பட்டோர் ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆரணி தாசில்தார் செந்தில்குமார் அலுவலகத்துக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். நாளை (அதாவது இன்று) காலை 10 மணியளவில் நெல்வாய்பாளையத்தை அடுத்த புலவன்பாடி, சீனிவாசபுரம், மருசூர், விண்ணமங்கலம் உள்பட 14 ஏரிகளுக்கு இன்னும் தண்ணீர் வராததற்கு ஆக்கிரமிப்பு தான் காரணம் என்றால், அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார்.
தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தகவல் தெரிவிக்காமல் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள், சரி இனிேமல் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
அதற்கு கிராம மக்கள், விவசாயிகள் ஆற்றுக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம், என்றனர். அதற்கு போலீசார், நாங்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கிறோம், என்றனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story