மது குடிக்க பணம் கேட்டு விளையாட்டாக மிரட்டி மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்த வாலிபர் உடல் கருகி பலி


மது குடிக்க பணம் கேட்டு விளையாட்டாக மிரட்டி மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்த வாலிபர் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 7 Jan 2021 4:04 PM IST (Updated: 7 Jan 2021 4:04 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே மது குடிக்க பணம் கேட்டு கொடுக்காததால், தற்கொலை செய்து கொள்வேன், என தந்தையிடம் விளையாட்டாக கூறி, மிரட்டி தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்த வாலிபர் உடல் கருகி பலியானார்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலத்தை அடுத்த அம்மையப்பன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரின் மகன் அனுமுத்து (வயது 30). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. குடி பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் ரகளை செய்வார். பணம் கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என விளையாட்டாகக் கூறி மிரட்டி, பெற்றோரை பணிய வைப்பார். மகனின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் அனுமுத்துவுக்கு பணம் கொடுப்பார்கள். அதில் அவர் மதுபானம் குடிப்பார்.

நேற்று முன்தினம் பீடி வேலை செய்து அதில் கிடைத்த கூலி ரூ.3 ஆயிரத்தை சுப்பிரமணி வைத்திருந்தார். இதையறிந்த அனுமுத்து, மது குடிக்க தந்தையிடம் வழக்கம்போல் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தராததால் வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றி கையில் வைத்துக் கொண்டு, மது குடிக்க பணம் தரவில்லை என்றால் நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி விளையாட்டாக அனுமுத்து மிரட்டி உள்ளார்.

வழக்கம்போல் அனுமுத்து விளையாட்டாக மிரட்டுகிறார், என தந்தை நினைத்துக் கொண்டார். அனுமுத்துவும் பெற்றோரை மிரட்டி மதுபானம் குடிக்க பணம் வாங்கலாம், என நினைத்து விளையாட்டாக அருகில் உள்ள பருத்தி வயலுக்குச் சென்று தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். எரியும் தீயுடன் அலறிய அனுமுத்துவை பெற்றோர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அனுமுத்து ஆபத்தான நிலையில் இருந்ததால், அவரை மீண்டும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். எனினும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்கொலை வழக்காக ஜோலார்பேட்டை சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story