தர்மபுரியில், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் - பெண்கள் உள்பட 163 பேர் கைது


தர்மபுரியில், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் - பெண்கள் உள்பட 163 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2021 7:06 PM IST (Updated: 7 Jan 2021 7:06 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 163 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் தர்மபுரி தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார்.

இதில் சங்க மாநில செயலாளர் நாகராசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், கலாவதி, அங்கம்மாள், சண்முகம், முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்கள் கொண்ட ‌3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் தலா ரூ.7,500 நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

அனைத்து நல வாரியங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பாரபட்சமின்றி பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 163 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story