வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வர டிப்ஸ் மட்டும் ரூ.50 - இதுவும் ஓர் பகல் கொள்ளை என்று பெண்கள் கருத்து
வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வர டிப்ஸ் மட்டும் ரூ.30 முதல் ரூ.50 வரை வாங்குகின்றனர். இதுவும் ஓர் பகல் கொள்ளை என்று பெண்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
கியாஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு கொண்டு வந்து வினியோகம் செய்பவர்கள் பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையில் இருந்து கூடுதலாக ரூ.30 முதல் ரூ.50 வரை வாங்குகின்றனர்.
இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கிறது. கூடுதலாக பணம் கொடுக்கவில்லை என்றால், கியாஸ் வினியோகிப்பதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றனர். இது குறித்து மதுரையை சேர்ந்த பெண்களில் சிலர் கூறியதாவது:-
மதுரை ஆண்டாள்புரம் நிர்மலா:
கியாஸ் சிலிண்டர் விலையானது நாளுக்கு நாள் ஏறுமுகமாகத்தான் இருக்கிறது. இதுவே பொதுமக்களுக்கு பெரிய அடியாக விழுகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மாதம் தோறும் கியாஸ் வாங்குவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். இதற்கிடையே, பில் தொகையை விட கூடுதலாக ரூ.50 வாங்குகிறார்கள். அதிலும், மாடி வீட்டில் இருந்தால், இன்னும் அதிகமாகிறது. வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் வாங்குவது குறித்து அந்தந்த ஏஜென்சிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், அரசும் இதனை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை வகுக்க வேண்டும். பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் சட்டம் கொண்டு வந்து, எஜென்சிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதாவது பில் தொகையை விட கூடுதலாக பணம் கேட்டால் கொடுக்ககூடாது. அவ்வாறு கொடுக்காமல் இருந்தால், இந்த பிரச்சினை தானாக சரியாகி விடும்.
மதுரை ஜீவாநகர் செல்வி:
கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் பணியில் இருப்பவர்கள் கூடுதலாக பணம் பெறுவது தவறுதான். மாடி வீடு மட்டுமல்லாமல் சாலையோரத்தில் தரை தரளத்தில் இருக்கும் நபர்களிடமும் ரூ.50ஐ கராராக பேசி வாங்குகிறார்கள். இதையும் ஒரு பகல் கொள்ளை என்றுதான் கூற வேண்டும். டிப்ஸ் கொடுக்கவில்லை என்றால், அடுத்த மாதம் கியாஸ் கொண்டு வருவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்களிடம் வாக்குவாதம் செய்ய முடியாமல் தான், அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கிறோம். இது குறித்து சம்பந்தப்பட்ட ஏஜென்சி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் பணம் வசூலிக்கும் பணியாளர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
வாடிப்பட்டி தாதம்பட்டி ராதா:
எங்கள் பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான பில்லில் ரூ.735 என உள்ளது. ஆனால் சிலிண்டர் எடுத்து வரும் நபர் கூடுதலாக ரூ.35 வாங்குகிறார். எதற்காக என்று கேட்டால் கொண்டுவந்து வீட்டில் டெலிவரி செய்வதற்காக சர்வீஸ் சார்ஜ் என்று கூறுகிறார். வங்கிக் கணக்கில் ரூ.46 மட்டுமே அரசின் மானியம் வரவு வைக்கப்படுகிறது. சிலிண்டர் விலை நிலையில்லாமல் ஏறுவதும், மானியம் என்ற பெயரில் பெயருக்காக குறைந்த அளவு பணம் தருவதும் வேதனைக்குரியது.
சிம்மக்கல் ராதா:
கூடுதலாக பணம் கொடுத்தால் தான் சரியான நேரத்திற்கு சிலிண்டரை டெலிவரி செய்கிறார்கள். இல்லை என்றால், வேண்டும் என்றே தாமதப்படுத்துகிறார்கள். மாதந்ேதாறும் அவர்களுக்கு ரூ.50 டிப்ஸ் கொடுக்க வீட்டுச்செலவில் தனியாக ஒதுக்க வேண்டியுள்ளது. இதுபோல், தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலும் அவர்களுக்கு தனியாக பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அந்த சமயத்தில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் இல்லை என்றாலும் பணம் வாங்குவதற்காகவே வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏதாவது நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
அண்ணாநகர் சுகந்தி:
மாடி வீட்டில் இருப்பதால், கியாஸ் சிலிண்டரை மேலே தூக்கிக்கொண்டு வருகிறார்களே என்ற நோக்கத்தில் ரூ.20 கொடுப்பது தவறில்லை. ஆனால், அதற்கு அதிகமாக கேட்டும்போது சங்கடமாக இருக்கிறது. இருப்பவர்கள் கொடுத்து விடுவார்கள். ஆனால், இல்லாதவர்களின் நிலைமையையும் யோசிக்க வேண்டும். எனவே கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வோர் டெலிவரி செய்யும் வீடுகளில் பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அவர்களுக்கு இதுதொடர்பான அறிவுரைகளை வழங்க வேண்டும். அதுபோல், அவர்களுக்குரிய சம்பளத்தை சரிவர வழங்க வேண்டும். சம்பளம் சரியாக வழங்கினால், அவர்கள் இதுபோன்ற தவறில் ஈடுபடமாட்டார்கள்.
திருமங்கலம் ஒன்றியம், சவுடர்பட்டியைச் சேர்ந்த கொடியரசி: ஏற்கனவே கியாஸ் சிலிண்டர் மானியம் குறைந்துள்ள நிலையில், வீடுகளுக்கு சிலிண்டர் போடுபவர்கள் ரூ.50 வரை டிப்ஸ் கேட்பது ஏற்புடையதல்ல. இதனால் எங்களைப் போன்ற ஏழை மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. எனவே ஏழை மக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story