கீழே தள்ளி விட்டதில் விடுதி பெண் பொறுப்பாளர் சாவு; தொழிலாளி கைது


கீழே தள்ளி விட்டதில் விடுதி பெண் பொறுப்பாளர் சாவு; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 7 Jan 2021 10:33 PM IST (Updated: 7 Jan 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கீழே தள்ளி விட்டதில் காயமடைந்த தனியார் தங்கும் விடுதியின் பெண் பொறுப்பாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர்,

திருப்பூர் லட்சுமி நகரில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியை அப்பகுதியை சேர்ந்த ரங்கநாயகி (வயது 65) என்பவர் பொறுப்பாளராக இருந்து கவனித்து வந்தார்.

இந்த விடுதியில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (35) என்பவர் தங்கியிருந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி நள்ளிரவில் குடிபோதையில் பால்பாண்டி தங்கும் விடுதிக்கு வந்துள்ளார். அப்போது விடுதியின் கதவை திறக்கச் சொல்லி ரங்கநாயகியிடம் பால்பாண்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகளால் தாக்கி அவரை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் ரங்கநாயகி காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து அடிதடி வழக்குப்பதிவு செய்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த ரங்கநாயகியின் உடல்நிலை மோசமானதால் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று அதிகாலை ரங்கநாயகி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து பால்பாண்டியை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story