வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி மறைமலைநகரில் பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 சதவீத தனி இடஒதுக்கீடு
தமிழக அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் ஊர்வலம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
ஊர்வலத்திற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன், மறைமலைநகர் நகர செயலாளர்கள் சரவணன், அரி, மாவட்ட நிர்வாகிகள் செந்தில்நாத், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் ஜி.எஸ்.டி. சர்வீஸ் சாலை வழியாக சிலம்பாட்டம், மேளதாளம் முழங்க மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் நோக்கி சென்றது.
பின்னர் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கு உடனே 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மறைமலைநகர் முன்னாள் நகர் மன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம் கண்டன உரையாற்றினார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மறைமலைநகர் நகராட்சி செயல் அலுவலர் விஜயகுமாரியிடம் இடஒதுக்கீடு கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் நகர நிர்வாகிகள் ரகுபதி, குணா, ரமேஷ் மற்றும் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம்
மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் பொன் கங்காதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் ஆத்தூர் கோபால கண்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் குமரவேல், மதுராந்தகம் நகர செயலாளர் சபரி, வக்கீல் சதீஷ் ஆகியோர் வரவேற்று பேசினர்.
சிறப்பு மாவட்ட செயலாளர் கணபதி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர், வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் மதுராந்தகம் நகராட்சி ஆணையாளர் நாராயணனிடம் மனு அளித்து விட்டு சென்றனர்.
இதில் மாவட்ட துணைச்செயலாளர் குணசேகரன். நகர நிர்வாகிகள் சந்தோஷ், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி கமலம்மாள், மாநில துணைத்தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
Related Tags :
Next Story