கரூர் அருகே மின்கம்பியை மாற்றியதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது


கரூர் அருகே மின்கம்பியை மாற்றியதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2021 6:43 AM IST (Updated: 8 Jan 2021 6:43 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே மின்கம்பியை மாற்றியதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கரூர்,

கரூர் அருகே உள்ள வெண்ணைமலை பசுபதிபாளைம் பகுதியை ேசர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான வீட்டின் மேலே மின்கம்பி சென்றுள்ளது. அதை மாற்றித்தரக்கோரி மண்மங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் செந்தில்குமார் கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி மனு கொடுத்துள்ளார். இதற்கு மின்வாரிய அலுவலகம் செந்தில்குமாரிடம் ரூ.38 ஆயிரத்து 240 கட்ட கூறியுள்ளது. இதையடுத்து அந்த தொகையை செந்தில்குமார் காசோலையாக மின்வாரியத்திற்கு செலுத்தி உள்ளார். இதையடுத்து அந்த மின்கம்பியை மின்வாரிய ஊழியர்கள் கடந்த 4-ந்தேதி மாற்றி அமைத்து உள்ளனர். இதன் பிறகு அந்த மின்வாரியத்தில் போர்மேனாக பணிபுரியும் குணசேகரன் (53) என்பவர் மின்கம்பியை மாற்றியதற்காக, செந்தில்குமாரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து முதலில் செந்தில்குமார் ரூ.4 ஆயிரத்தை குணசேகரனிடம் கொடுத்துள்ளார்.

அதிரடி கைது

மீதம் உள்ள ரூ.4 ஆயிரத்தை குணசேகரன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் அந்த பணத்தை கொடுக்க மனமில்லாத செந்தில்குமார், இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்தில்குமாரிடம் ரசாயண பவுடர் தடவிய ரூ.4 ஆயிரத்தை கொடுத்து, மண்மங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று குணசேகரனிடம் கொடுக்க சொல்லி உள்ளனர். அதன்படி செந்தில்குமார், குணசேகரனிடம் ரூ.4 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேஷ் தலைமையிலான போலீசார், குணசேகரனை கையும், களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story