போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கலெக்டரிடம் மனு


போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 8 Jan 2021 8:35 AM IST (Updated: 8 Jan 2021 8:35 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் கடந்த மாதம் 22-ந் தேதி ஜானகி என்பவர் அவரது வீட்டில் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார். இந்த கொலை தொடர்பாக மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மணல்மேடு நடுத்திட்டு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யாவு என்பவரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அய்யாவு கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதனால் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்யாவு, பின்னர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அய்யாவு கடந்த மாதம் 27-ந்் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நிவாரணம் வழங்க வேண்டும்

இந்தநிலையில் இறந்துபோன அய்யாவுவின் மனைவி கண்ணகி, அவரது மகள்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வக்கீல் குணவேந்தன், ஒன்றிய அமைப்பாளர் மோகன் குமார் மற்றும் சிலர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், போலீசார் துன்புறுத்தியதன் விளைவாக அய்யாவு விஷம் குடித்து இறந்தார். ஆனால் போலீசார் சந்தேக மரணம் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அய்யாவு சாவிற்கு மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தான் காரணம்.

எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அய்யாவுவின் மரணத்தை காவல் நிலைய மரணம் எனக்கருதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Next Story