புதுச்சேரி கலெக்டருக்கு வழங்கிய குடிநீர் பாட்டிலில் கிருமிநாசினி பரபரப்பு-போலீஸ் விசாரணை


புதுச்சேரி கலெக்டருக்கு வழங்கிய குடிநீர் பாட்டிலில் கிருமிநாசினி பரபரப்பு-போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Jan 2021 9:06 AM IST (Updated: 8 Jan 2021 9:06 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாவட்ட கலெக்டருக்கு வழங்கிய குடிநீர் பாட்டிலில் கிருமிநாசினி இருந்ததால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் உள்பட அனைவருக்கும் அலுவலக ஊழியர்களால் காபி, குடிநீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் கலெக்டர் பூர்வா கார்க் தனக்கு வழங்கப்பட்டு இருந்த குடிநீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க முயன்றார். அப்போது அந்த பாட்டிலில் இருந்து ஒருவிதமான வாசனை வீசியதால் கலெக்டர் சுதாரித்துக் கொண்டார்.

கிருமி நாசினி
இதனால் தண்ணீரை குடிக்காமல் தவிர்த்தார். அதன்பின் கலெக்டருக்கு வழங்கப்பட்ட பாட்டிலை பார்த்த போது ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட அதில் கிருமி நாசினி (சானிடைசர்) நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபற்றி தெரியவந்ததும் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கலெக்டர் பூர்வா கார்க்கும் அதிர்ச்சிக்குள்ளானார்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக சிறப்பு அதிகாரி சுரே‌‌ஷ்ராஜ் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

ஆலோசனை கூட்டத்தின் போது மற்ற அதிகாரிகளுக்கு சரியான குடிநீர் பாட்டில் கொடுத்து இருக்கும் போது கலெக்டருக்கு மட்டும் கிருமிநாசினி நிரப்பிய பாட்டில் மாறியது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆலோசனை கூட்டத்தில் கலெக்டருக்கு கிருமி நாசினி நிரம்பிய பாட்டில் வழங்கப்பட்ட சம்பவம் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story