குமரியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய 2 பேர் கைது


குமரியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2021 9:53 AM IST (Updated: 8 Jan 2021 9:53 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இதேபோன்று நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் யுனிக் அசட் புரமோட்டர்ஸ் அன்ட் எஸ்டேட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை திருவிதாங்கோட்டை சேர்ந்த செய்யது அலி, அழகியமண்டபம் புல்லுவிளையை சேர்ந்த ஜெயசசிதரன் (வயது 55), மொந்தன்பிலாவிளையை சேர்ந்த எட்வின் சுதாகர் (48), மார்த்தாண்டம் காட்டுவிளையை சேர்ந்த ரமே‌‌ஷ் மற்றும் சிலரும் சேர்ந்து நடத்தி வந்தனர்.

இதன் கிளை நிறுவனங்கள் மார்த்தாண்டம் மற்றும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைப்பதாக ஏஜெண்டுகள் மூலம் ஆசைவார்த்தைகள் கூறியதால், ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர்.

2 பேர் கைது

இதை நம்பி நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வசந்தகுமார் (40) என்பவர் தனது பெயரிலும், மனைவி மற்றும் தாயார் பெயரிலும் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் முதலீடு செய்தார்.

அது கடந்த 2019-ம் ஆண்டு முதிர்வு அடைந்ததை தொடர்ந்து, வசந்தகுமார் பணத்தை திரும்ப பெற நிதி நிறுவனத்துக்கு சென்றார். அப்போது பணத்தையும் தராமல், அசல் பத்திரங்களையும் வாங்கி கொண்டனர். அதைத்தொடர்ந்து நிதி நிறுவனத்தை மூடிவிட்டனர்.

இதுபற்றி வசந்தகுமார் நேற்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு முத்துப்பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நிதி நிறுவனத்தை நடத்தி வந்த ஜெயசசிதரன், எட்வின் சுதாகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் வெளியான தகவல்கள் வருமாறு:-

ரூ.5 கோடி முதலீடு

யுனிக் அசட் புரமோட்டர்ஸ் அன்ட் எஸ்டேட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை தலைமையிடமாகக் கொண்டு குமரி, ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கிளைகளை நிறுவி செயல்பட்டு வந்துள்ளனர்.

இதற்கு ஏஜெண்டுகளாக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரிய- ஆசிரியைகளை நியமித்துள்ளனர். அவர்கள் மூலம் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று கூறச்செய்து நம்ப வைத்துள்ளனர். இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் ரூ.5 கோடி வரை முதலீடு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

சிறையில் அடைப்பு

குமரி மாவட்டத்தில் மட்டும் 800 முதல் ஆயிரம் பேர் வரை முதலீடு செய்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை எனத்தெரிய வந்துள்ளது.

இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள வெட்டூர்ணிமடம் தலைமை அலுவலகம், மார்த்தாண்டத்தில் உள்ள கிளை அலுவலகம் ஆகியவற்றில் இருந்து முதலீடு செய்தவர்கள் தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செய்யது அலி, ரமே‌‌ஷ் ஆகியோரையும், சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகளான அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

புகார் கொடுக்கலாம்

இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு முத்துப்பாண்டியன் கூறியதாவது:-

குமரி, ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்று அதிக வட்டி தருவதாகவும், நிலம் தருவதாகவும், பணம் இரட்டிப்பாக தருவதாகவும் கூறும் நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்து ஏமாற வேண்டாம். இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளில் முதலீடு செய்து பணத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். பணத்தை இழந்தவர்கள் புகார் கொடுத்தபிறகுதான் எவ்வளவு மோசடி நடந்துள்ளது என்பதை சரியாக கூற முடியும். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் அசல் அல்லது நகல் பத்திரங்கள், பணம் கட்டியதற்கான அசல் ரசீதுடன் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story