புதுச்சேரி கவர்னருக்கு எதிரான போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு; ‘கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டு வரவேண்டும்’
கவர்னருக்கு எதிராக இன்று முதல் 4 நாட்கள் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டு வர காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கவர்னருக்கு எதிராக போராட்டம்
புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறியும், அவரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் அனுமதி தர மறுத்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தார். அதில் ஆம்பூர் சாலையில் ஜென்மராக்கினி கோவில் அருகில் இருந்து ரங்கப்பிள்ளை வீதி, நீடராஜப்பையர் வீதி உள்ளிட்ட சாலைகளில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் காவல்துறை சார்பில் மறைமலை அடிகள் சாலையில் அண்ணாசிலை முதல் வெங்கடசுப்பாரெட்டியார் சிலை இடையே உள்ள இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போட்டி அரசாங்கம்
கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு தொடர் தர்ணா நடத்தப்பட உள்ளது.
இதற்கான தெருமுனை பிரசாரங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அண்ணா சிலைக்கும், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலைக்கும் இடையே மறைமலை அடிகளார் சாலையில் ஒரு மிகப் பெரிய போராட்டம் நடைபெறும்.
கவர்னர் மாளிகை ஒரு போட்டி அரசாங்கம் நடத்துகிறது. புதுவை மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுகிறது. ஜனநாயக விரோதியான கவர்னர் கிரண்பெடியின் அட்டூழியங்களை எதிர்ப்பதற்காக, நம்மோடு சேர்ந்து, இந்த பெரிய போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெற்றி பெறச் செய்ய வேண்டும்
இன்று முதல் நடைபெற உள்ள மாபெரும் போராட்டத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக அணிதிரண்டு வந்து பங்குபெற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story