கடல் நீர் உட்புகுந்து வருவதால் புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்


கடல் நீர் உட்புகுந்து வருவதால் புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jan 2021 11:20 AM IST (Updated: 8 Jan 2021 11:20 AM IST)
t-max-icont-min-icon

கடல்நீர் உட்புகுந்து வருவதால் புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கடலூர்,

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், புவனகிரி வர்த்தக சங்கம் மற்றும் சமூக நல அமைப்பினர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு பெயர்களைக்கொண்டு உருவாகும் ஆறுகளான சுவேதா நதி, வசிஷ்டா நதி, சின்னாறு, ஆணைவாரி ஓடை, கோமுகி நதி, மணிமுத்தாறு ஆகியவற்றின் சங்கமம் தான் வெள்ளாறு. 193 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வெள்ளாறு பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் எல்லையை வரையறுத்து கடலூர் மாவட்டத்தில் நுழைந்து திட்டக்குடி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி ஆகிய முக்கிய நகரங்களின் வழியாக பயணித்து பரங்கிப்பேட்டை அருகே வங்கக்கடலில் கலக்கிறது.

வெள்ளாறு கடற்கரையில் இருந்து 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 70 ஆண்டுகளில் தனது பாதையை மாற்றி மண் அரிப்பு ஏற்பட்டு மண் படிவ மேடுகள் அடித்து செல்லப்பட்டு ஆற்றின் படுகை மட்டம் குறைந்துள்ளது. இதனால் கடல் நீர் மட்டம் உயரும் போது கடல் நீர் ஆற்றின் முகத்துவாரம் வழியாக ஆற்றுப்பாதையில் 21 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து, பின்னர் வடிவது வழக்கமாக உள்ளது. இதனால் ஆற்றில் செயற்கையாக உருவான பள்ளம், குழிகளில் கடல் நீர் தேங்கி நல்ல நிலையில் இருந்த நிலத்தடி நீர் உப்பாக மாறி விட்டது.

நிலத்தடி நீர் உப்பு

வெள்ளாற்றின் தென்புறக்கரையில் அமைந்துள்ள சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட பொன்னந்திட்டு, சி.மானம்பாடி, மடுவங்கரை, நஞ்சை மகத்து வாழ்க்கை, புஞ்சைமகத்து வாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, சி.முட்லூர், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, கீரப்பாளையம், வடஹரிராஜபுரம், ஒரத்தூர், சாக்காங்குடி, பரதூர் ஆகிய கிராமங்களும்,

வடபுறக்கரையில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை, அகரம், அரியகோஷ்டி, ஆணையன்குப்பம், பு.முட்லூர், தீர்த்தாம்பாளையம், ஆதிவராகநல்லூர், மஞ்சக்குழி, தம்பிக்கு நல்லான்பட்டிணம், மேல்புவனகிரி, கீழ்புவனகிரி, பெருமாத்தூர் போன்ற பல்வேறு கிராமங்களிலும் நிலத்தடி நீர் உப்பாக மாறியதால் பொதுமக்கள் பெரிதும்பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கதவணை கட்ட வேண்டும்

விவசாயிகள் கால்நடைகளை வளர்க்க போதிய தன்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இதை தவிர்க்க புவனகிரி ஆதிவராகநல்லூரில் வெள்ளாற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். பல கட்ட போராட்டங்களையும் நடத்தி உள்ளோம். ஆனால் இது வரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே வெள்ளாற்றை காப்பாற்றவும் நிலத்தடி நீரை பாதுகாக்கவும், விவசாயிகள், பொதுமக்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், வெள்ளாற்றின் குறுக்கே கதவணை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது பற்றி நேரிலும் விவசாயிகள், பொதுமக்கள், சமூக நல அமைப்பினர் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

Next Story