நாமக்கல் மாவட்டத்தில் 17-ந் தேதி 1, 274 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து - கலெக்டர் மெகராஜ் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் 17-ந் தேதி 1, 274 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து - கலெக்டர் மெகராஜ் தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2021 3:59 PM IST (Updated: 8 Jan 2021 3:59 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 17-ந் தேதி 1,274 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் மெகராஜ் கூறினார்.

நாமக்கல்,

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 17-ந் தேதி நாடு முழுவதும் நடைபெறுவதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட 1,58,491 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல தற்பொழுது நடைபெறும் முகாமில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 1,105 முகாம்களும், நகராட்சி பகுதியில் 169 முகாம்களும் என மொத்தம் 1,274 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இப்பணியில் பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 5,523 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். மேலும் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், சந்தைகள், சினிமா தியேட்டர்கள், கோவில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 36 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது, பாதுகாப்பானது. எனவே மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து வழங்கி, போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story