மாவட்டத்தில் பரவலாக மழை: வசிஷ்ட, சுவேத நதிகளில் வெள்ளப்பெருக்கு - ஆணையம்பட்டி, தெடாவூர் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதனால் வசிஷ்ட, சுவேத நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆணையம்பட்டி, தெடாவூர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பரவலாக பெய்து வரும் இந்த மழை காரணமாக வசிஷ்ட, சுவேத நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தலைவாசல், ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வழக்கமாக தை மழை நெய் மழை என்ற பழமொழி கூறுவார்கள், அதாவது பனியின் தாக்கத்தை குறைத்திடும் வகையில், சாரல் மழை பெய்வது வழக்கம். ஆனால் அதற்கு நேர்மாறாக இந்த பலத்த மழையால் மாவட்டத்தின் சில இடங்களில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தேவூர் பகுதியில் பெய்த சாரல் மழையால், பல்வேறு இடங்களில் நெற் பயிர்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் தலைவாசல் மற்றும் வீரகனூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வீரகனூர் வழியாக செல்லும் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் லத்துவாடி ஊராட்சியில் சுவேத நதி குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக லத்துவாடி கிராமத்தில் இருந்து திட்டச்சேரி கிராமத்திற்கு செல்லும் ெபாதுமக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த லத்துவாடி ஊராட்சி தலைவர் கோமதி குழந்தைவேல் தரைப்பாலங்கள் வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார். இதேபோல் கவர்பனை பகுதியில் செல்லும் சுவேத நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர் மழையால், கெங்கவல்லி பகுதியில் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக நடுவலூர் ஏரி, ஆணையம்பட்டி ஏரி ஆகிய பகுதிகளில் தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதையடுத்து ஆணையம்பட்டி, தெடாவூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளானார்கள். மேலும் தண்ணீர் புகுந்த வீடுகளில் மக்கள் விடிய, விடிய பரிதவிப்புடன் தவித்தனர். இதையடுத்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றிட வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தொடர் மழை காரணமாக ஏத்தாப்பூர் பகுதியில் வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள தடுப்பணையை தாண்டி உபரிநீர் வெளியேறியதை காண அந்த பகுதி மக்கள் கூடியிருந்ததை காண முடிந்தது.
அதே போல் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் வசிஷ்ட நதி தடுப்பு அணையும் தொடர் மழை காரணமாக தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது.
தலைவாசல் பஸ் நிலையம் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வசிஷ்ட நதி பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் செல்லும் ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வழியாக ரமேஷ் என்ற விவசாயி ஓட்டிச்சென்ற டிராக்டர் வெள்ள நீரில் சிக்கி கொண்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கிய டிராக்டரை மீட்டனர்.
மழைநீர் குறைவாக வரும் காலங்களில் இந்த பாதையில், கார், டிராக்டர் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மழைநீர் வடியும் வரை இந்த பாதையில் வாகனங்களில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று தலைவாசல் ஊராட்சி தலைவர் அசோக் வேண்டுகோள் விடுத்தார்.
தம்மம்பட்டி-கோனேரிப்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள புளியமரக்கிளை ஒன்று நேற்று காலை முறிந்து சாலையின் குறுக்கே தொங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கோனேரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்லையன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக உதவியாளர் யோகாம்பாள் மரக்கிளையில் யாரும் சிக்கி விபத்து ஏற்படாமல் இருக்க தனது மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தி எதிரில் வரும் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை எச்சரிக்கையாக செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்பட்டது. பின்னர் அவர் அப்பகுதியில் மின் இணைப்பை துண்டிக்க தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்து மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுத்தார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கிராம நிர்வாக உதவியாளர் யோகாம்பாளை பாராட்டினர்.
Related Tags :
Next Story