கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்புகளுடன் திரண்ட விவசாயிகள் - பெரியாறு பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்


கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்புகளுடன் திரண்ட விவசாயிகள் - பெரியாறு பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
x

பெரியாறுபாசனகால்வாய்களுக்கு தண்ணீர் வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில் கரும்புகளுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசன கால்வாய்களில் முறையாக தண்ணீர் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

இதையொட்டி நேற்று காலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான விவசாயிகள் கரும்புகளுடன் திரண்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் மற்றும் போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் முற்றுகையை கைவிட்டு விட்டு கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆா்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆா்.தேவர் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஜெயசிம்மன், திரைப்பட இயக்குனர் களஞ்சியம், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, ம.தி.மு.க. மாநில தணிக்கை குழு உறுப்பினர் கார்கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சந்திரன், விஸ்வநாதன், மாவட்ட கவுன்சிலர் சாந்தாராணி, ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் அன்வர் பாலசிங்கம், முத்துராமலிங்கம், தி.மு.க.மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்டகலெக்டர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்களிடம் கலெக்டர் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தார். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story